முகப்பு
சென்னை

பணிமனையாக்கப்படுகிறதா ராயபுரம் ரயில் நிலையம்?

ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக்குவதற்கு பதிலாக, பணிமனையாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், கடந்த ஆண்டு ராயபுரம் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த நடைமேடைகள் அகலப்படுத்தும் பணியும் நிறுத்தப்பட்டுவிட்டது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:09 AM
பகிர்:

ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக்குவதற்கு பதிலாக, பணிமனையாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், கடந்த ஆண்டு ராயபுரம் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த நடைமேடைகள் அகலப்படுத்தும் பணியும் நிறுத்தப்பட்டுவிட்டது.

மேலும் 2015 - 2016-ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக்குவதற்கு நிதியும் ஒதுக்கப்படவில்லை. அதேவேளையில் தாம்பரம் ரயில் நிலையத்தை முனையமாக்குவதற்காக ரூ. 10 கோடி ரயில்வே பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர்களால் 1856-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது ராயபுரம் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையம் நாட்டிலேயே 3-வது பழைமையான ரயில் நிலையமாகும்.

Advertisement

ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக மாற்றுவதற்கு தமிழகத்தைச் சேர்ந்த 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2012-ஆம் ஆண்டு கையெழுத்திட்டு கோரிக்கை மனு அளித்தனர். ரயில்வே துறையைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் குழு ராயபுரம் ரயில் நிலையத்தை 2012, ஜனவரி 20-ஆம் தேதி ஆய்வு செய்தது.

ராயபுரத்தில் அமைக்கப்பட்டுவரும் லோகோ ஷெட்டை மாநகரத்துக்கு வெளியே அமைக்க வேண்டும். அப்போது தான் ராயபுரத்தை முனையமாக மாற்ற முடியும். தென் மாவட்டங்களுக்கு தாம்பரத்தில் இருந்து ரயில்களை இயக்கக் கூடாது ஆகிய கோரிக்கைகளை தமிழ்நாடு ரயில் பயணிகள் உரிமைகள் தீர்வகம் வலியுறுத்தியது.

மேலும் ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக்குவதற்குப் பதிலாக விரைவு ரயில்கள் சிறிது நேரம் நின்று செல்வதற்கு வசதி ஏற்படுத்தித் தரலாம் என்று கூறப்பட்டது. இப்போது ராயபுரம் ரயில் நிலையம் வழியாக 15 பல்வேறு விரைவு ரயில்கள் சென்று கொண்டிருக்கின்றன. இதனிடையே தண்டையார்பேட்டை ரயில் நிலையத்தை முனையமாக்கலாம் என்ற மாற்றுத் திட்டமும் தயாரிக்கப்பட்டது.

அதிவேக வளர்ச்சி: 1873-ஆம் ஆண்டு ஆறு மீட்டர்கேஜ் வழித்தடங்களுடன் தொடங்கப்பட்ட சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், இப்போது 15 அகல வழித்தடங்களுடன் இயங்கி வருகிறது.

இப்போது நாடு முழுவதுமிருந்து ரயில்கள் வந்து செல்லும் இடமாக மாறியுள்ளது. அதுபோல, 1906-ஆம் ஆண்டு மூன்று மீட்டர்கேஜ் வழித்தடங்களுடன் தொடங்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம், இப்போது ஒன்பது அகல வழித்தடங்களுடன் இயங்கி வருகிறது.

ஆனால், 1856-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ராயபுரம் ரயில் நிலையம் எந்த வளர்ச்சியும் இல்லாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களை இதற்கு மேல் விரிவாக்கம் செய்ய முடியாத நிலை உள்ளதால், அடுத்ததாக ராயபுரம் ரயில் நிலையத்தை சென்ட்ரல், எழும்பூருக்கு இணையான ரயில் நிலையமாக மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு ரயில் பயணிகள் உரிமைகள் தீர்வகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஏ.பி.பி. போஸ் கூறியது:

ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக்குவதற்கான அனைத்துப் பணிகளையும் தெற்கு ரயில்வே மேற்கொண்டு வருகிறது. நடைமேடைகளை அகலப்படுத்தும் பணியும் அதற்காகவே மேற்கொள்ளப்பட்டது. ஆனால், நிதி ஒதுக்கினால்தானே பணிகள் நடைபெறும்? இப்போதைக்கு எதுவுமே நடைபெறாமல் அப்படியே இருக்கிறது.

முன்னாள் ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா ஆய்வு செய்து ராயபுரம் ரயில் நிலையத்துக்குத் தேவையான நிலத்தை மாநில அரசு தர வேண்டும் என்று சொன்னார். அதற்கு முறையான கடிதம் தமிழக அரசுக்கு அனுப்பப்படும் என்றார்.

ஆனால் அதற்கான எந்த முயற்சியையும் இதுவரை தெற்கு ரயில்வே அதிகாரிகள் எடுக்கவில்லை. ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக்கும் முயற்சிகளை மேற்கொள்ள அதிகாரிகள் ஏன் மறுக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்றார் போஸ்.

இது குறித்து தெற்கு ரயில்வே உயரதிகாரி கூறியது:

ராயபுரம் ரயில் நிலையம் அருகே இரண்டு மேம்பாலங்கள் உள்ளன இவை ரயில் நிலையத்தில் இருந்து 500 மீட்டர் இடைவெளியில் உள்ளன. ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக அறிவிக்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் மேம்பாலத்தின் இடையே 1,200 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். மேலும் ராயபுரத்தில் இதன் காரணமாக இட நெருக்கடி மக்கள் அதிகமிருப்பதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக்குவதற்கான அனைத்துப் பணிகளையும் தெற்கு ரயில்வே மேற்கொள்ளும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments