நவீன நகரமாகிறது புதுச்சேரி, எண்ணூர்?
வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் 100 நகரங்கள் நவீன நகரங்களாக (ஸ்மார்ட் சிட்டி) மாற்றப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் 100 நகரங்கள் நவீன நகரங்களாக (ஸ்மார்ட் சிட்டி) மாற்றப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் இதற்கான கட்டமைப்பை ஏற்படுத்தத் திட்டமிட்டு முதல் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, ரூ.48 ஆயிரம் கோடி முதல் கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்தெந்த நகரங்கள் நவீன நகரங்களாக மாற்றப்படும் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
இருப்பினும் 100 நகரங்களின் பட்டியலில் எண்ணூர், புதுச்சேரி ஆகியவை நவீன நகரங்களை உருவாக்கும் திட்டத்தில் இடம் பெற்றுள்ளதாக நகர்ப்புற வளரச்சி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், புதுச்சேரியை நவீன நகரமாக்குவதற்கு பிரான்ஸ் அரசுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Advertisement
நவீன நகரம் என்றால் என்ன?:
நவீன நகரங்களில் மின் தொடரமைப்பு பாதைகளில் இருந்து கழிவு நீர் செல்லும் குழாய்கள் வரை அனைத்தும் ஒரு வலைப் பின்னலில் (நெட்வொர்க்) இணைக்கப்பட்டு இருக்கும். கேமராக்கள், வயர்லெஸ் கருவிகள், தகவல் மையங்கள் என ஆங்காங்கே அமைக்கப்பட்டு இருக்கும். இதன்மூலம் ஒரு விளக்கை அணைக்க மறந்தாலும், சம்பந்தப்பட்ட நபரின் கட்டடம் அந்த வேலையை செய்து முடிக்கும்.
கார்கள், இரு சக்கர வாகனங்களை போக்குவரத்து நெரிசல் இல்லாத இடமாக பார்த்து நிறுத்திட உதவும்.
நவீன நகரங்களில் இடம் பெறும் மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க மென்பொருள்கள் உருவாக்கப்படும். உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனங்கள், நவீன நகரங்களை உருவாக்கி சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு தகவல் தொழில்நுட்பப் பணியை சிறப்பாகச் செய்து வருகின்றன.
மேலும், நகரங்களின் நீர் மேலாண்மை "ஸ்மார்ட் மீட்டர்' மூலம் கணக்கிடப்படும் . இதன்மூலம், பயனாளர்கள் தங்களின் தண்ணீர் பயனீட்டு அளவை அவர்களே பார்த்துக் கொள்ள முடியும். மேலும் அதை மற்ற மக்களின் பயன்பாட்டு அளவுடன் ஒப்பிட்டுக் கொள்ளலாம்.
மேலும், கழிவுகள் அனைத்தும் ஓரே குழாய் வழியாக இணைக்கப்பட்டு மொத்தமாக சுத்திகரிக்கப்படும்.
நவீன நகரங்கள் உள்ள நாடுகள்: சீனா, சிங்கப்பூர், அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் நவீன நகரங்கள் உள்ளன. தற்போது இந்தியாவில் ஆமதாபாத் அருகே உள்ள கிஃப்ட்(GIFT) இந்தியாவின் முதல் நவீன நகரமாக உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகள் 2011 ஆம் ஆண்டே தொடங்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பணிகள் 2021 ஆம் ஆண்டு முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நவீன நகரமாக்கும் திட்டத்தால் ஒவ்வொரு நகரிலும் சுமார் 5 லட்சம் மக்களுக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.