கைதிகளை நல்வழிப்படுத்தி, ஊக்குவிக்கும் வகையில் தொழில் முனைவோர்களாக மாறியுள்ள முன்னாள் கைதிகளைக் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்த சிறைத் துறை முடிவு செய்துள்ளது.
தமிழக சிறைத் துறையின் கீழ் 9 மத்திய சிறைகளும், 9 மாவட்ட சிறைகளும், 95 துணை சிறைகளும், 3 பெண்கள் சிறப்பு சிறைகளும் உள்ளன. 22 ஆயிரம் பேரை காவலில் அடைப்பதற்குரிய கட்டமைப்புகள் உள்ள இந்தச் சிறைகளில், சுமார் 13,900 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகள். எஞ்சிய 30 சதவீதம் பேர் தண்டனை கைதிகள்.
கல்வி புகட்டலும், தொழிற் பயிற்சி அளித்தலும்..: கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில், கல்வி கற்பித்தல், தொழில் பயிற்சி அளித்தல் போன்ற நடவடிக்கைகளை சிறைத் துறை கடந்த சில ஆண்டுகளாக எடுத்து வருகிறது.
"கைநாட்டு' போடும் கைதி கூட சிறைக்கு சென்றால், பட்டம் பெறும் அளவுக்கு சிறைத் துறையினர் வழிகாட்டுகின்றனர்.
இதுதவிர, ஆயத்த ஆடை தயாரித்தல், கைத்தறி, விசைத்தறி, புத்தகம் பைண்டிங், காலணி செய்தல், கயிறு செய்தல், பேக்கரி சார்ந்த உணவு பொருள்கள் தயாரித்தல், பினாயில் தயாரிப்பு, அட்டை தயாரிப்பு, பேண்டேஜ் துணி தயாரிப்பு, சீருடை தயாரிப்பு, பாத்திரங்கள் தயாரிப்பு, அல்வா, மிக்சர் உள்ளிட்ட நொறுக்குதீனி தயாரித்தல் உள்பட 40 க்கும் மேற்பட்ட சிறு தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு, தொழில்களிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
நாட்டுக்கே வழிகாட்டும் சிறை அங்காடி: இரு ஆண்டுகளுக்கு முன் சிறைகளில் தொடங்கப்பட்ட அங்காடிகள் மூலம் கைதிகள் உற்பத்தி செய்யும் பொருள்கள் நேரடியாக விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலம் சிறைத்துறை ஆண்டுக்கு சுமார் ரூ. 5 கோடி மதிப்புள்ள பொருள்களை விற்பனை செய்கிறது. நாட்டிலேயே சிறை அங்காடிகளை சிறப்பாக செயல்படுத்தி, அதிகப்படியான பொருள்களை விற்பது தமிழக சிறைத்துறைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலையாகும்போது கைதிகள் மறுவாழ்வு: இந்த நடவடிக்கைகளின் காரணமாக, விடுதலையாகும் கைதிகள் புதிய நம்பிக்கையுடன் தங்களது வாழ்க்கையைத் தொடங்குவதாக சிறைத் துறை உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதோடு, முன்னாள் கைதிகளுக்கு நல்ல வேலைவாய்பை சிறைத்துறையே அண்மைக்காலமாக பெற்றுதந்து, மறுவாழ்வை அளித்துவருகிறது.
நம்பிக்கையை ஏற்படுத்திய முன்னாள் கைதிகள்: இந்த நிலையில், கைதிகளில் தொழில்முனைவர்களாக மாறி சமூகத்தில் நல்ல நிலையை எட்டி பிடித்திருக்கும் முன்னாள் கைதிகளை கைதிகளுடன் நேரடியாக பேச வைத்து வாழ்க்கையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி வருகின்றனர்.
புழல் மத்திய சிறையில் அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், சில முன்னாள் கைதிகளை சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியது நல்ல வரவேற்பும், கைதிகளிடம் எதிர்பார்த்த மாற்றமும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அண்மையில் நடைபெற்ற குடியரசுத் தின விழாவில் மத்திய சிறைகளிலும், பெண்கள் சிறப்பு சிறைகளிலும் முன்னாள் கைதிகளை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து வந்து, கைதிகளிடம் சிறைத்துறை பேச வைத்தது. இந்த விழாக்களில் ஒரேநாளில் 32 பேர் பங்கேற்றனர்.
சோர்வுடன் இருந்தவர்களும் உற்சாகம்!: இந்த விழாக்களில் முன்னாள் கைதிகள் தாங்கள் சிறைக்கு வந்த காரணத்தையும், பின்னர் சிறையில் தங்களுக்கு கிடைத்த கல்வி, தொழில்வாய்ப்புகளையும் எடுத்து கூறினர். மேலும் சிறையை விட்டு வெளியே வந்ததும், சிறையில் கிடைத்த கல்வியறிவு, தொழிற் பயிற்சி மூலம் தொழில்முனைவராக மாறி இன்று சமூகத்தில் நல்ல நிலையில் இருப்பதையும் கைதிகளை ஊக்கப்படுத்தும் வகையில் பேசினர்.
இதனால், நம்பிக்கை இழந்து சோர்வுடன் காணப்பட்ட கைதிகளுக்கு, புதிய நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாகவும், மனசோர்வுடன் மறைந்து உற்சாக நிலைக்கு மாறியிருப்பதாகவும் சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் புதிய முயற்சி மன அழுத்தம், நம்பிக்கையின்மை, எதிர்காலம் குறித்த அச்சம் போன்றவை நீங்கி, சாதிக்க முடியும் என்ற எண்ணம் பெரும்பாலான கைதிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
கைதிகளின் மனதளவில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தப்பட்டிருப்பதால், இதுபோன்ற நிகழ்ச்சிகளை இனி அடிக்கடி நடத்தி ஊக்குவிக்க உள்ளதாக சிறைத் துறை தெரிவிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.