சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி புறநகர் மின்சார ரயில் மார்க்கத்தில் பொன்னேரி, மீஞ்சூர், அத்திப்பட்டு, அத்திப்பட்டு புதுநகர், எண்ணூர், விம்கோ நகர், திருவொற்றியூர் உள்ளிட்ட 15 ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன.
வடசென்னையையொட்டி அமைந்துள்ள இந்த புறநகர் ரயில் பாதை, திருவள்ளூர் மாவட்டத்தைக் கடந்து ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை, நெல்லூர் வரை செல்கிறது.
ரயில்வே அட்டவணையின்படி, இந்த மார்க்கத்தில் சென்னை சென்ட்ரலிலிருந்து கும்மிடிப்பூண்டிக்கு செல்ல ஒரு மணி நேரம், 15 நிமிடங்கள் ஆகும். அதேபோல், பொன்னேரிக்கு 1 மணி நேரம் ஆகும்.
ஆனால், பெரும்பாலும் மின்சார ரயிலில் சென்னை சென்ட்ரலிலிருந்து பொன்னேரிக்குச் செல்ல 2 மணி நேரமாகிறது.
மறுமுனையில், கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரயில்கள் தினசரி 30 முதல் 45 நிமிடங்கள் வரை காலதாமதமாகத் தான் செல்கின்றன.
இதனால், பல்வேறு அலுவல் காரணமாக மின்சார ரயில்களில் சென்று வரும் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
இப்பிரச்னை தொடர்பாக, ரயில்வே துறை அதிகாரியொருவர் கூறியதாவது:
வட மாநிலங்களுக்குச் செல்லும் பெரும்பாலான விரைவு ரயில்களும் இம்மார்க்கம் வழியாகத் தான் இயக்கப்படுகிறது.
அதேபோல், வட மாநிலங்களுக்கு சிமென்ட், கோதுமை, அரிசி உள்ளிட்ட பொருள்களை கொண்டு செல்லும் சரக்கு ரயில்களும் இம்மார்க்கத்தில் தான் இயக்கப்படுகிறது.
இதன் காரணமாகத் தான், புறநகர் மின்சார ரயிலை குறித்த நேரத்தில் இயக்க முடியாத நிலை உள்ளது என்றனர்.
இந்நிலையில், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் கூடுதல் ரயில் பாதைகளை அமைத்து இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.