சென்னை

ரூ.18 கோடிக்கு நூல்கள் விற்பனை: 15 லட்சம் பேர் வருகை: நிறைவடைந்தது சென்னை புத்தகக் காட்சி

DIN

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வந்த "சென்னை புத்தகக் காட்சி' ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெற்றது.  இந்த ஆண்டு ரூ.18 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகின. 

கடந்த 17 நாள்களில் புத்தகக் காட்சிக்கு  சுமார் 15 லட்சம் பேர் வருகை தந்ததாக பபாசி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். 

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் இதுவரை இல்லாத அளவுக்கு மொத்தம் 820 அரங்குகளுடன் அமைக்கப்பட்ட சென்னை புத்தகக் காட்சியை கடந்த ஜன.4-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.  இதையடுத்து தினமும் புத்தகக் காட்சி நடைபெறும் வளாகத்தில் அறிவியல்,  இலக்கியம், ஆன்மிகம் என பல்வேறு தலைப்புகளில் நூல்கள் வெளியிடப்பட்டன. அதேபோன்று எழுத்தாளர்கள்,  இலக்கியவாதிகள்,  அரசு அதிகாரிகள், கவிஞர்கள் என பல துறை சார்ந்த புத்தக ஆர்வலர்கள் சிறப்புச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினர்.  அரங்குகளைப் பார்வையிடுவதற்கு வசதியாக பதிப்பகங்கள் குறித்த அட்டவணை அச்சிடப்பட்ட துண்டுப்பிரசுரம் வாசகர்களுக்கு வழங்கப்பட்டது.  கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு புத்தகக் காட்சி அரங்குகள் வாசகர்களால் நிரம்பி வழிந்தது.  
பதிப்பாளர்களுக்கு கௌரவம்:  இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான புத்தகக் காட்சி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெற்றது.  நிறைவு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பதிப்புத் துறையில் கடந்த 25 ஆண்டுகளாக சிறந்த முறையில் பங்களிப்பை ஆற்றி வரும் 30 பதிப்பாளர்களுக்கு விருதுகளை வழங்கிக் கௌரவித்தார்.  புத்தகக் காட்சியையொட்டி நடத்தப்பட்ட பேச்சு, திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

முன்னதாக நீதிபதி ஆர்.மகாதேவன் பேசுகையில், ஒரு நாட்டின் சிறந்த புத்தகங்களே அந்த நாட்டின் அறிவுச் செல்வங்களாக மதிக்கப்படுகின்றன. படைப்பு என்பது கலாசாரம்,  பண்பாடு,  மண், மொழி என்ற குறுகிய வட்டத்துக்குள் அடங்கியதல்ல;  மாறாக அது உலகத்துக்கே பொதுவான ஒரு விஷயமாகும். உலக மக்களுக்கு ஞானத்தை வாரிக் கொடுக்கிறது தமிழ் மொழி. அதில் திருக்குறளுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.  வாழ்க்கையை இரண்டு வரிகளில் வலிமைப்படுத்தி முன்னேற்றத்தை நோக்கி வழிநடத்தக் கூடிய மிகப் பெரிய சக்தி திருக்குறளுக்கு உள்ளது. 

வீரியமிக்க படைப்புகள்:  வீரியமிக்க படைப்புகளை வாசிக்கும் வாசகர்களிடம் மிகப் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தி வாசிப்போரையும் படைப்பாளிகளாக்கும்.  மானுடம் தழைக்கவும்,  அறிவார்ந்த சமுதாயம் உருவாகவும் புத்தகங்கள் மிகவும் அவசியம் என்றார். 

5 லட்சம் குழந்தைகளுக்கு... இந்த ஆண்டு புத்தகக் காட்சி குறித்து பபாசி தலைவர் வயிரவன்,  துணைத் தலைவர் மயிலவேலன் ஆகியோர் கூறியது:  கடந்த 17 நாள்களில் சுமார் 15 லட்சம் வாசகர்கள் புத்தகக்காட்சிக்கு வருகை தந்தனர்.  5 லட்சம் குழந்தைகளுக்கு இலவச நுழைவுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.  மொத்தம் ரூ.18 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT