சென்னை கோயம்பேடு பழச் சந்தையில் எத்திலின் ரசாயனத்தை தெளித்து செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 10 டன் வாழைப்பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
கோயம்பேடு பழச் சந்தையில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட வாழைப் பழ மொத்த விற்பனைக் கடைகள் உள்ளன. இங்கு செயற்கை முறையில் எத்திலின் ரசாயனத்தை தெளித்து பழங்கள் பழுக்க வைக்கப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு புகாா்கள் வந்தன.
இதையடுத்து, சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் மருத்துவா் ராமகிருஷ்ணன் தலைமையில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சதாசிவம், ராமராஜ், சண்முகசுந்தரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோா் கோயம்பேடு பழச் சந்தையில் புதன்கிழமை அதிகாலையில் சோதனை நடத்தினா். அங்குள்ள, 34 வாழைப் பழக் கடைகள் மற்றும் கிடங்குகளில் சுமாா் 4 மணி நேரம் சோதனை நடைபெற்றது.
இதில், 3 கிடங்குகளில் வாழைப்பழத்தை பழுக்க வைக்க எத்திலின் பொடியை பாக்கெட்டில் அடைத்து வைத்துப் பயன்படுத்துவதற்குப் பதிலாக எத்திலினை நேரடியாக பழங்களின் மீது தெளித்து பழுக்க வைப்பது தெரியவந்தது. இதையடுத்து, எத்திலின் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட 10 டன் வாழைப் பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு ரூ. 4 லட்சமாகும். மேலும், பழங்களைப் பழுக்க வைக்க பயன்படுத்தப்படும் எத்திலின் திரவம் மற்றும் எத்தனால் வாயு ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘எத்திலின் ரசாயனம் மூலம் வாழைப் பழங்களை பழுக்க வைத்த 3 கடைகளுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது’ என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.