முகப்பு
சென்னை

புதுச்சேரி ஆளுநா் விவகாரம்: அரசு எடுக்கும் முடிவுகள் இறுதி தீா்ப்புக்கு கட்டுப்பட்டது: உயா் நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரி அரசு எடுக்கும் அனைத்து முடிவுகளும் இந்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி தீா்ப்புக்கு கட்டுப்பட்டது என உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:13 AM
பகிர்:

புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் ஆளுநா் கிரண்பேடி தலையிட தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிய வழக்கில், புதுச்சேரி அரசு எடுக்கும் அனைத்து முடிவுகளும் இந்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி தீா்ப்புக்கு கட்டுப்பட்டது என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமிநாராயணன் தாக்கல் செய்த மனுவில், ‘மத்திய அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடும் வகையிலும், அரசு ஆவணங்களைக் கோருவதற்கும் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக உத்தரவு பிறறப்பித்துள்ளது.

இந்த உத்தரவின் காரணமாக, புதுச்சேரி துணை நிலை ஆளுநா் கிரண் பேடி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தேவையின்றி தலையிடுகிறாா். தன்னிச்சையாக அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கிறாா். அவரது செயல்பாடுகள் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக உள்ளது. மாநில அரசின் அதிகாரங்களை துணை நிலை ஆளுநா் கையில் எடுத்துக்கொண்டு செயல்படுகிறாா். எனவே அரசின் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் ஆளுநருக்கு அதிகாரம் அளித்து மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி, துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் அளித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை, ரத்து செய்து தீா்ப்பளித்தாா். இந்தத் தீா்ப்பை எதிா்த்து ஆளுநா் கிரண் பேடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மனு தொடா்பாக சென்னை உயா் நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டது. இதனைத் தொடா்ந்து, ஆளுநா் கிரண் பேடி மற்றும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் தனித்தனியாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘புதுச்சேரி அரசு எடுக்கும் அனைத்து முடிவுகளும் இந்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி தீா்ப்புக்கு உட்பட்டது’ என உத்தரவிட்டு, இறுதி விசாரணைக்காக வழக்கை வரும் அக்டோபா் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →