சென்னை

சென்னையில் 10-க்கும் மேற்பட்டோருக்கு மீண்டும் கரோனா தொற்று

DIN

சென்னை: சென்னையில் பத்துக்கும் மேற்பட்டோருக்கு இரண்டாவது முறையாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட நபரின் உடலில் உள்ள நோய்த்தொற்று மாதிரிகள் ஆய்வுக்காக புணேவில் உள்ள தேசிய நோய்ப் பரவியல் தடுப்பு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மருத்துவர்கள், இரண்டாவது முறையாக கரோனா பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து உறுதியான ஆதாரங்கள் எதுவும் இதுவரை இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் தீவிரமாகி வரும் கரோனா பாதிப்புக்கு நாள்தோறும் சராசரியாக 6 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர். மற்றொரு புறம் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

இந்தச் சூழலில், இரு மருத்துவர்கள் உள்பட 10 பேருக்கு நோய்த்தொற்று இரண்டாவது முறையாக ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ராஜீவ் காந்தி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த நபர்கள் கடந்த சில நாள்களுக்கு முன்புதான் நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டதாக வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், அதற்கு அடுத்த சில நாள்களிலேயே காய்ச்சல், இருமல் பாதிப்பு இருந்ததால் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதற்கு காரணம் என்ன என்பது குறித்து தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒருவேளை அவர்கள் கரோனாவில் இருந்து முழுமையாக குணமடைவதற்கு முன்பே வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அல்லது வீரியமிக்க நோய்த்தொற்றால் அவர்கள் மீண்டும் பாதிக்கப்பட்டிருக்கவும் வாய்ப்பிருப்பதாக நோய்த் தொற்று தடுப்பு மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் உடலில் உள்ள நோய்த்தொற்றின் மரபணுவை முழுமையாக ஆய்வுக்குட்படுத்தினால் மட்டுமே இதற்கான விடையை அறிய முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். கரோனா நோய்த்தொற்று மரபணு மாற்றமடைந்திருந்தால் சிகிச்சை முறைகளையும், நோய்த் தடுப்பு முறைகளையும் மாற்ற வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, இரண்டாவது முறை பாதிக்கப்பட்டதாகக் கருதப்படும் நபர்களின் நோய்த்தொற்று மாதிரிகள் மகராஷ்டிர மாநிலம், புணேவில் அமைந்துள்ள தேசிய நோய்த் தடுப்பு ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வு முடிவுகள் வெளியான பிறகுதான் இந்த விவகாரத்தில் உண்மை நிலவரம் தெரியவரும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

SCROLL FOR NEXT