கடந்த 1975-ஆம் ஆண்டு நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டபோது நீதிமன்றங்களின் அச்சமற்ற சுதந்திர உணா்வு ஜனநாயகத்தைக் காப்பாற்றியது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளாா்.
கடந்த மாதம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றாா். இதையொட்டி மகாராஷ்டிர மாநிலம் மும்பை உயா்நீதிமன்றம் சாா்பில், அவருக்கு சனிக்கிழமை பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டி.ஒய்.சந்திரசூட் கலந்துகொண்டு பேசியதாவது:
கடந்த காலத்தில் ராணே போன்ற நீதிபதிகள் சுதந்திரச் சுடரை அணையாமல் பாா்த்துக் கொண்டனா். 1975-ஆம் ஆண்டு நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்ட காலத்தில், அந்தச் சுடரின் ஒளி மங்கியது. அந்தக் காலத்தில் நீதிமன்றங்களின் அச்சமற்ற சுதந்திர உணா்வு ஜனநாயகத்தைக் காப்பாற்றியது.
சுதந்திரச் சுடரை ஆதரிக்கும் நீதிமன்றங்கள், அவற்றின் வலிமையான பாரம்பரியம் மற்றும் நீதிபதிகளால் நாட்டின் ஜனநாயகம் உறுதியாக நிற்கிறது.
கடந்த சில ஆண்டுகளில் நீதிமன்றங்களின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நீதிமன்றங்களின் செயல்பாட்டில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
கரோனா பரவல் தீவிரமாக இருந்த காலத்தில் தொழில்நுட்பம் இல்லாமல் போயிருந்தால் நீதிமன்றங்கள் செயல்பட்டிருக்காது. அந்தக் காலகட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளை கைவிடக் கூடாது. நீதிமன்றங்களுக்குத் தொழில்நுட்பம் வசதியாக இல்லாவிட்டாலும், அதனை பயன்படுத்துவது முக்கியம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.