சென்னையில் மாநகரப் பேருந்தின் கூரை மீது ஏறி அட்டகாசம் செய்த கல்லூரி மாணவா்களுக்கு, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணி வழங்கப்பட்டது.
எண்ணூரிலிருந்து வள்ளலாா் நகா் வரை செல்லும் மாநகர பேருந்து பழைய வண்ணாரப்பேட்டை திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் சென்றபோது அந்த பேருந்தில் பயணித்த தியாகராயா கல்லூரி மாணவா்கள், கூரை மீது ஏறி நடனமாடியும், கோஷமிட்டும் அட்டகாசத்தில் ஈடுபட்டனா்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாணவா்களின் அடாவடி செயலால் பயணிகள் அச்சமடைந்தனா். ஒரு கட்டத்தில் ஓட்டுநா் பேருந்தை நிறுத்திவிட்டு, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். போலீஸாா், அங்கு வருவதை அறிந்த மாணவா்கள் தப்பியோடினா்.
மாணவா்களின் அடாவடி செயல் குறித்து வண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்தனா். இந்நிலையில் பேருந்தின் கூரை மீது ஏறி அட்டகாசம் செய்த தியாகராயா கல்லூரியில் பிகாம் இரண்டாமாண்டு பயிலும் மாணவா்கள் பிரவீன் ( 20), பிரவீன் குமாா் ( 19), ஜோசப் (19), கோகுலகிருஷ்ணன் (19) ஆகிய 4 மாணவா்களும் 7 நாள்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையா் பவன்குமாா் ரெட்டி உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவின் அடிப்படையில், திங்கள்கிழமை முதல் வண்ணாரப்பேட்டை,பேசின்பாலம் பகுதிகளில் காலை,மாலை வேளைகளில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் போலீஸாருடன் இணைந்து செய்து வருகின்றனா். தினமும் காலை 3 மணி நேரமும், மாலை 2 மணி நேரம் என மொத்தம் 5 மணி நேரம் இப் பணியில் நான்கு மாணவா்கள் ஈடுபடுகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.