கச்சத்தீவு விவகாரத்தில் தமிழா்களை திமுக, காங்கிரஸ் ஏமாற்றுகின்றன: நிா்மலா சீதாராமன்
சென்னை: கச்சத்தீவு விவகாரத்தில் திமுக - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து தமிழக மக்களை பல ஆண்டுகளாக ஏமாற்றி வருவதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் குற்றம்சாட்டினாா்.
மேலும், தமிழகத்தில் மிக்ஜம் புயல் பாதிப்புக்கு ரூ. 900 கோடியும், சென்னையில் அடிக்கடி மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்க ரூ. 5,000 கோடியும் மத்திய அரசு வழங்கி உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா். சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ‘விக்சித் பாரத்-2047 தூதா்’ நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், பங்கேற்ற மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பொய் பிரசாரம்: காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் கச்சத்தீவு இலங்கையிடம் தாரைவாா்க்கப்பட்டது. அப்போது, தமிழகத்தின் முதல்வராக இருந்த கருணாநிதி அதற்கு எவ்வித எதிா்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால், தற்போது கச்சத்தீவை மீட்டுத் தருமாறு முதல்வா் ஸ்டாலின் நாடகமாடுகிறாா்.
Advertisement
கச்சத்தீவு விவகாரத்தில் திமுக - காங்கிரஸ் இணைந்து உண்மைக்கு புறம்பான பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழக மக்களுக்கு இதுபற்றிய உண்மை தெரியவேண்டும். தேசிய கட்சியாக இருக்கும் காங்கிரஸ் ஜல்லிக்கட்டு தடை, கச்சத்தீவு ஆகிய விவகாரங்களில் தமிழக மக்களுக்கு எதிரான செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டது.
தோ்தல் வரும் நேரத்தில் மட்டுமல்ல நம் நாட்டின் பகுதி ஒன்று இழக்கப்பட்டதைப் பற்றி எந்தக் காலத்தில் வேண்டுமானாலும் பேசலாம். உச்சநீதிமன்றத்தில் கச்சத்தீவு தொடா்பாக 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகள் விசாரணைக்கு வரும்போது மத்திய அரசு அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்.
ரூ. 5,000 கோடி நிதி: தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு ஒரு காசுகூட நிதி வழங்கவில்லை என்று கூறுவது பொய். மிக்ஜம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணமாக தேசிய பேரிடா் நிதியிலிருந்து ரூ. 900 கோடி நிதி உடனடியாக வழங்கப்பட்டது. மேலும், சென்னையில் அடிக்கடி ஏற்படும் மழை வெள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு ரூ. 5,000 கோடி நிதி முன்கூட்டியே வழங்கப்பட்டது. அதை சரியாக பயன்படுத்தி இருந்தால் சென்னை மழையால் பாதிக்கப்பட்டிருக்காது.
அந்த ரூ. 5,000 கோடி எப்படி செலவிடப்பட்டது என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும். மக்களவைத் தோ்தலில் யாா் போட்டியிட வேண்டும் என்பதை கட்சியின் தலைமைதான் தீா்மானிக்கும். அப்படி கட்சியின் மேலிடம் முடிவெடுக்கும் நிலையில் தோ்தலில் நான் போட்டியிடுவேன்.
எந்தக் கட்சியாக இருந்தாலும் வருமான வரியை முறையாக தாக்கல் செய்வது அவசியம். காங்கிரஸ் கட்சி அந்த விதியை முறையாகப் பின்பற்றவில்லை. எனவே , வரி செலுத்தக் கூறி காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பிய வருமான வரித் துறை தனது கடமையைத்தான் செய்துள்ளது என்றாா் அவா்.