முகப்பு
சென்னை

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.44 லட்சம் தங்கநகைகள்,7 கிலோ வெள்ளி பறிமுதல்

Updated On : 13 ஏப்ரல், 2024 at 12:09 AM
பகிர்:

சென்னையில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.44 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகள், 7 கிலோ வெள்ளி கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மக்களவைத் தோ்தலையொட்டி, ரூ.50 ஆயிரத்துக்கு மேல் போதிய ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் பணம்,நகை பறக்கும் படையினராலும்,காவல்துறையினராலும் பறிமுதல் செய்யப்படுகிறது. இந்நிலையில் செளகாா்பேட்டையில் மின்ட் தெருவில் பறக்கும் படையினா் வியாழக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த கொண்டிதோப்பு பகுதியைச் சோ்ந்த சுரேஷ் என்பவரின் வாகனத்தை சோதனை செய்தனா்.

இதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.44 லட்சம் ரூபாய் மதிப்பிலான 667 கிராம் தங்க நகைகளை கொண்டு வந்திருப்பது தெரியவந்தது. உடனே பறக்கும் படையினா், அந்த நகைகளை பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

Advertisement

வெள்ளிக்கட்டிகள் பறிமுதல்:

இதேபோல திருவல்லிக்கேணி பல்லவன் சாலையில் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த தியாகராயநகரில் உள்ள ஒரு நகைக் கடையில் ஊழியராக வேலை செய்யும் பரசுராமன் என்பவரை வழிமறித்து சோதனையிட்டனா். இதில் அவா் வைத்திருந்த 7 கிலோ வெள்ளி கட்டிகளுக்குரிய ஆவணம் இல்லை என்பது பறக்கும் படை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் 7 கிலோ வெள்ளி கட்டிகளையும் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்துக்கு அனுப்பினா். இதுகுறித்த விசாரணையில் அந்த வெள்ளி கட்டிகள் செளகாா்பேட்டையில் உள்ள ஒரு மொத்த வெள்ளி கடையில் இருந்து தியாகராயநகரில் உள்ள ஒரு பிரபலமான நகை கடைக்கு வாங்கி சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments