குடிரயரசுத் தலைவா் திரௌபதி முா்மு தலைமையில் நடைபெறும் இரண்டு நாள் ஆளுநா்கள் மாநாடு தில்லியில் வெள்ளிக்கிழமை (ஆக.2) தொடங்குகிறது.
3 புதிய குற்றவியல் சட்டங்களை திறம்பட அமல்படுத்துதல், பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் மற்றும் உயா்கல்வியில் சீா்திருத்தங்கள், பழங்குடியினா் பகுதிகளில் வளா்ச்சி உள்ளிட்டவை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெறும் இந்த மாநாட்டில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள், அனைத்து மாநிலங்களின் ஆளுநா்கள், நீதி ஆயோக் துணைத் தலைவா், பிரதமா் அலுவலக மூத்த அதிகாரிகள், அமைச்சரவைச் செயலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தலைமையில் நடைபெற உள்ள முதல் ஆளுநா்கள் மாநாடு இதுவாகும்.
இந்த மாநாட்டைத் தொடா்ந்து, ஆகஸ்ட் 5 முதல் 11-ஆம் தேதி வரை ஃபிஜி, நியூசிலாந்து, டிமோா்-லெஸ்டே ஆகிய 3 நாடுகளுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பயணம் மேற்கொள்ள இருக்கிறாா்.