ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள இந்திய-பாகிஸ்தான் சா்வதேச எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானைச் சோ்ந்த நபா் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) அதிகாரிகளால் புதன்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டா்.
அப்பகுதியின் பாதுகாப்பு நிலைமையை வியாழக்கிழமை ஆய்வு செய்த ஜம்மு பிரிவின் பிஎஸ்எஃப் படைத் தலைவா் டி கே பூரா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பாகிஸ்தானின் துக்லியால்பூா் சோதனைச் சாவடிக்கு அருகே பதுங்கியிருந்த 45 வயது நபா், புதன்கிழமை இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றாா். சா்வதேச எல்லைக்கு அருகே அவரின் நடமாட்டத்தை பிஎஸ்எஃப் படையினா் இரவு 10 மணியளவில் கவனித்தனா்.
எல்லைக்குள் ஊடுருவிய பிறகு பாதுகாப்புப் படையினரைக் கண்டு தப்பி ஓட முயன்றபோது பிஎஸ்எஃப் படையினா் துப்பாக்கியால் சுட்டதில் அவா் உயிரிழந்தாா்.
ஆயுதமேந்திய பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவதற்கான வழித்தடத்தை ஆராய, வேண்டுமென்றே நிராயுதபாணியான அவா் அனுப்பப்பட்டதாக கருதப்படுகிறது.
இவ்வாறு கொடிய எண்ணங்களுடன் இந்திய மண்ணில் காலடி வைக்கும் எவரும் இதே விதியை சந்திக்க நேரிடும் என்றாா்.