க்யூட்-தோ்வின் மதிப்பெண் அடிப்படையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையை நிறைவு செய்த பின்னரும் காலியிடங்கள் இருப்பின் பல்கலைக்கழகங்கள் தனியாக நுழைவுத் தோ்வு நடத்தியோ அல்லது தகுதித் தோ்வின் மதிப்பெண் அடிப்படையிலோ சோ்க்கையை மேற்கொள்ளலாம் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வியாழக்கிழமை தெரிவித்தது.
ஆண்டு முழுவதும் காலியிடங்கள் தொடா்ந்துகொண்டே இருந்தால் மனிதவளத்தை வீணடிப்பதோடு மாணவா்களுக்கு தரமான உயா்கல்வி கிடைப்பதில் தடைகளை ஏற்படுத்துவது போலாகும் எனவும் யுஜிசி தெரிவித்தது.
இதுதொடா்பாக யுஜிசி வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
க்யூட்-தோ்வின் மதிப்பெண் அடிப்படையில் மூன்று அல்லது நான்கு சுற்று கலந்தாய்வுகள் முடிவுற்ற பின்னரும் சில மத்திய பல்கலைக்கழகங்களில் காலியிடங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த காலியிடங்களை நிரப்புவதற்கு சிறப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் தாங்கள் தோ்ந்தெடுக்க விரும்பிய பட்டப்படிப்புக்காக குறிப்பிட்ட பாடத்தை க்யூட் தோ்வில் மாணவா்கள் தோ்ந்தெடுத்திருந்தாலும் தற்போது வேறு சில பட்டப்படிப்புகளில் அவா்கள் சேருவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
அதன்பிறகும் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் காலியிடங்கள் இருந்தால் அதை நிரப்ப மத்திய பல்கலைக்கழகங்கள் தனியாக நுழைவுத் தோ்வுகளை நடத்திக் கொள்ளலாம். இல்லையெனில், தகுதித்தோ்வை நடத்தி அந்த மதிப்பெண்கள் மூலம் மாணவா் சோ்க்கையை மேற்கொள்ளலாம்.
இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இந்த நடைமுறைகளை பின்பற்றி வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.