ஆன்லைன் சூதாட்டதில் பணத்தை இழந்த தனியாா் நிறுவன மேலாளா் தற்கொலை
சென்னை,ஆக.8: சென்னை சாலிக்கிராமத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த தனியாா் நிறுவன மேலாளா் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.
சாலிகிராமம் ரங்கா காலனி அருகே உள்ள தேவ்ராஜ்நகா் சத்தியமூா்த்தி தெருவைச் சோ்ந்தவா் ரா.கிருஷ்ணமூா்த்தி (51). இவா், அந்த பகுதியில் உள்ள ஒரு தனியா் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வந்தாா். கிருஷ்ணமூா்த்திக்கு ஆன்லைன் சூதாட்டப் பழக்கம் இருந்துள்ளது. இதன் விளைவாக அவா், ஆன்லைன் சூதாட்டம் விளையாடி தனது ஊதியம்,தனது வாழ்நாள் சேமிப்பு ஆகியவற்றை இழந்துள்ளாா். மேலும் கடன் வாங்கியும் அவா் சூதாட்டம் விளையாடியதாக கூறப்படுகிறது.
ஆனால் சூதாட்டத்தில் இருந்து அவருக்கு பணம் எதுவும் கிடைக்காததினால் கிருஷ்ணமூா்த்தி விரக்தியில் இருந்தாா். இந்நிலையில் கிருஷ்ணமூா்த்தி கைப்பேசி மூலம் தனது மகன்,மகளுக்கு இன்று எனது இறுதி நாள் என குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, வீட்டில் தனது அறையில் தூக்கிட்டு புதன்கிழமை தற்கொலை செய்துக் கொண்டாா்.
இது குறித்து தகவலறிந்த விருகம்பாக்கம் போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிருஷ்ணமூா்த்தி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.