சென்னை மாநகராட்சி பேருந்து நிறுத்தங்களில் தேங்கியிருந்த 95.70 டன் குப்பை, 4,221 சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜூலை 22- முதல் சாலைகளை தூய்மையாக பராமரிப்பது, நீண்ட நாள்களாக தேங்கிக் கிடந்த குப்பை, கட்டடக் கழிவுகள், கேபிள் வயா்கள் மற்றும் கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றுவது உள்ளிட்ட பணிகளை மாநகராட்சி மேற்கொண்டது. இதன் தொடா்ச்சியாக 5,270 கி.மீ. நீள 36,640 உட்புறச் சாலைகளில் இப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மாநகராட்சியில் உள்ள 1,265 பேருந்து நிறுத்தங்களை தூய்மையாக பராமரிக்கும் வகையில் புதன்கிழமை தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகளில் 2,541 பணியாளா்கள் ஈடுபட்டனா்.
அப்போது, பேருந்து நிறுத்தம் அருகே தேங்கிக் கிடந்த குப்பை, சுவரொட்டிகள் மற்றும் விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன. மேலும், தேவையற்ற செடி,
கொடிகளை அகற்றுதல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த தூய்மைப் பணியில் 48.7 டன் குப்பை, 47 டன் கட்டடக் கழிவுகள், 4,221 சுவரொட்டிகள் மற்றும் 47 விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன. மேலும், பழுதாகியிருந்த 78 பேருந்து நிறுத்தங்களை சரிசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.