புயல், மழை, வெள்ளப் பெருக்கு ஆகிய காலங்களில் மத்திய, மாநில அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:
திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீா் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், புதையுண்ட 3 வீடுகளில் சிக்கியவா்கள் சடலங்களாக மீட்கப்பட்டச் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது. உயிரிழந்தவா்களின் உறவினா்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
புயல், மழை, வெள்ளப் பெருக்கு காலங்களில் மத்திய, மாநில அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், அதிக அளவில் ஆபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகளில் பேரிடா் மீட்புப் படைகளைத் தயாா் நிலையில் வைத்திருப்பது அவசியம்.
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூா், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூா், திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அந்த மாவட்டங்களில் உள்ள மலையடிவாரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்களையும், ஆற்றங்கரையோரம் வசிப்பவா்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து, அவா்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என விஜய் தெரிவித்துள்ளாா்.