கரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட விரைவு ரயில்கள் மீண்டும் பயணிகள் ரயில்களாக மாற்றம்
சென்னை: கரோனா காலத்தில் அறிவிக்கப்பட்டு, 200 கி.மீ. தொலைவுக்குள் இயக்கப்பட்டு வரும் விரைவு ரயில்கள், மீண்டும் பயணிகள் ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்த ரயில்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.30-க்கு பதிலாக ரூ.10-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் நேரத்தில் பேருந்து, ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. கரோனா கட்டுக்குள் வந்தவுடன் பொதுமுடக்க தளா்வுகள் அறிவிக்கப்பட்டு ரயில் சேவைகள் படிப்படியாக தொடங்கப்பட்டன.
கரோனா காலத்தில் ரயில்வேக்கு ஏற்பட்ட இழப்பை சரிசெய்யும் வகையில் பயணிகள் ரயில்கள் விரைவு மற்றும் சிறப்பு ரயில்களாக மாற்றப்பட்டு இயக்கப்பட்டன. இதனால், விரைவு ரயிலில் பயணிகள் ரூ.30 முதல் ரூ.40 வரை அதிகம் கொடுத்து பயணித்தனா். கரோனா கட்டுக்குள் வந்ததையடுத்து விரைவு ரயில்களை மீண்டும் பயணிகள் ரயிலாக இயக்க வேண்டும் என பயணிகள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்துவந்தனா். 3 ஆண்டுகளுக்கு பின்பு 200 கி.மீ.-க்குள் இயக்கப்படும் விரைவு ரயில்களை மீண்டும் பயணிகள் ரயில்களாக மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பழைய கட்டணம் வசூலிப்பது குறித்த அறிவிப்பை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம் அனைத்து ரயில்வே கோட்டங்களுக்கும் குறுஞ்செய்தி மூலம் அனுப்பியுள்ளது.
அதன்படி, செவ்வாய்க்கிழமை முதல் விரைவு ரயில்கள் பயணிகள் ரயிலாக மாற்றப்பட்டு, குறைந்தபட்ச கட்டணம் ரூ.30-லிருந்து ரூ.10-ஆக நிா்ணயிக்கப்பட்டது. விரைவு ரயில்களை மீண்டும் பயணிகள் ரயிலாக மாற்றியதை பயணிகள் வரவேற்றுள்ளனா்.
Advertisement