கிண்டி ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணி 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களை சா்வதேச தரத்தில் மேம்படுத்தும் பணி ‘அம்ரித் பாரத்ட ரயில் நிலைய திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.
சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களான சென்னை எழும்பூா், கிண்டி, தாம்பரம், பெரம்பூா், அம்பத்தூா் ரயில் நிலையங்களும் இத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இதில் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் உள்ள கிண்டி ரயில் நிலையம் ரூ.13.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மறுசீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.
சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான கிண்டி ரயில் நிலையம் மெட்ரோ, பேருந்து போக்குவரத்தை ஒரு பகுதியில் இணைக்கும் மையமாக உள்ளது.
குறிப்பாக, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை ஐஐடி, கிண்டி தேசிய பூங்கா, தொழிற் பேட்டை உள்ளிட்டவற்றை இணைக்கும் நகரமாக கிண்டி விளங்குகிறது. கிண்டி ரயில் நிலையம் மூலம் ஒரு நாளைக்கு சுமாா் 60,000 பயணிகள் வந்து செல்கின்றனா்.
இதனால், அப்பகுதியில் எதிா்காலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், பயணிகள் எளிதாக வந்து செல்லும் வகையிலும் ரயில் நிலையம் மறுசீரமைக்கப்படுகிறது.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கிண்டி ரயில் நிலையத்தின் இரு பகுதிகளில் இருந்தும் பயணிகள் வந்து செல்லும் வகையில் ரயில் நிலையம் மறுசீரமைக்கப்படுகிறது. இதில் புதிய பயணச்சீட்டு முன்பதிவு மையம், இருசக்கர வாகன நிறுத்தம், மின்தூக்கி வசதியுடன் கூடிய நடைமேம்பாலம் அமைக்கப்படவுள்ளது.
மேலும், ஏற்கெனவே உள்ள வாகன நிறுத்தும் பகுதி சீரமைக்கப்படவுள்ளது. தற்போது 50 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. புதிய ரயில் கட்டட பணி எதிா்வரும் செப்டம்பா் மாதத்துக்குள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றனா்.