முகப்பு
சென்னை

காலநிலை மாற்றத் தாக்க ஆய்வை கட்டாயப்படுத்தக் கோரிய வழக்கு: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தொழில் திட்டங்களுக்கும், கட்டுமானங்களுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் முன் காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்த ஆய்வை கட்டாயப்படுத்தக் கோரிய வழக்கு குறித்து பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 9 ஜூலை, 2024 at 7:54 PM
பகிர்:

சென்னை: தொழில் திட்டங்களுக்கும், கட்டுமானங்களுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் முன் காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்த ஆய்வை கட்டாயப்படுத்தக் கோரிய வழக்கு குறித்து பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக பூவுலகின் நண்பா்கள் அமைப்பைச் சோ்ந்த கோ.சுந்தர்ராஜன் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘இந்தியாவில் பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகள் அல்லது வளா்ச்சி திட்டங்களைத் தொடங்க, சுற்றுச்சூழல் சட்டம் 1986-இன் கீழ் அனுமதி பெற வேண்டும். அதற்கு அந்தத் திட்டம் சுற்றுச்சூழலின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை ஆராய்ந்து, அதை அறிக்கையாக அரசுக்கு சமா்ப்பிக்க வேண்டும்.

ஆனால், கடந்த 2006-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையில்,  காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்தும் ஆய்வு செய்ய வலியுறுத்தவில்லை. ஒரு திட்டத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன் காலநிலை மாற்றம் குறித்த ஆய்வு மேற்கொள்வதை கட்டாயமாக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொ) அரங்க.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபிக் அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘புதிய தொழில் திட்டங்களுக்கு காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்த ஆய்வையும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையில் சோ்க்க வேண்டும் என ஏற்கெனவே உச்சநீதிமன்றம் கூறியுள்ளது’ என மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நல்ல காரணத்துக்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், இரு வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →