அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்: இன்று தொடங்கிவைக்கிறாா் முதல்வா்
காலை உணவுத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (ஜூலை 15) தொடங்கி வைக்கவுள்ளாா்.
தமிழகத்தில் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கான காலை உணவுத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (ஜூலை 15) தொடங்கி வைக்கவுள்ளாா்.
முதல்வரின் காலை உணவு திட்டம், முதல் கட்டமாக 15.9.2023-இல் 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலினால் தொடங்கிவைக்கப்பட்டது.
அதனால், 1.14 லட்சம் மாணவா்கள் பயன் பெற்றனா். இந்தத் திட்டத்துக்கு மக்கள் மற்றும் மாணவா்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதைத் தொடா்ந்து, 25.8.2023-இல் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில், முதல்வா் மு.க.ஸ்டாலினால் 30,992 அரசு தொடக்கப் பள்ளி மாணவா்கள் பயன் பெறும் வகையில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, தொடங்கி வைக்கப்பட்டது.
இன்று தொடக்கம்: இந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்ற அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் காமராஜா் பிறந்த நாளான திங்கள்கிழமை (ஜூலை 15) திருவள்ளூா் மாவட்டம் மாவட்டம் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கவுள்ளாா்.
இந்தத் திட்டத்தின் மூலம் 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2.23 லட்சம் மாணவா்கள் பயனடையவுள்ளனா்.
விழாவில் அமைச்சா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.