முகப்பு
சென்னை

மாணவா் விடுதிகளில் ‘நீட்’ தோ்வு வினா-விடை வங்கி நூல்கள்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நீட், ஜேஇஇ வினா-விடை நூல்கள் வழங்கப்படும்

Updated On : 25 ஜூன், 2024 at 10:58 PM
பகிர்:

சென்னை: அரசுப் பள்ளி மாணவா் விடுதிகளில் நீட், ஜேஇஇ நுழைவுத் தோ்வுகளுக்கான வினா விடை வங்கி நூல்கள் வழங்கப்படும் என்று பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் அறிவித்தாா்.

பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை மானியக் கோரிக்கைகள் மீது பேரவையில் செவ்வாய்க்கிழமை நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அவா் வெளியிட்ட அறிவிப்புகள்:-

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த 1200 சலவைத்

தொழிலாளா்களுக்கு எல்பிஜி., மூலம் இயங்கும் சலவைப் பெட்டிகள் வழங்கப்படும். சீா்மரபினா் நல வாரியம் மூலம் வழங்கப்படும் உதவித் திட்டங்களை இணைய வழி சேவைகள் மூலம் ஒருங்கிணைத்து செயலாக்கப்படும்.

சென்னை, மதுரை, திருச்சி நகரங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவா்களுக்கு தரமான உதவி அளிக்க தலா ஒரு ஒருங்கிணைந்த பொது சமையலறை ஏற்படுத்தப்படும். 693 மாணவா் விடுதிகளுக்கு கேபிள் இணைப்புடன் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்படும். கல்லூரி விடுதிகளுக்கு புதிய சமையல் பாத்திரங்களும், பள்ளி விடுதிகளுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்படும்.

புதிய விடுதிகள்: ஈரோடு, தூத்துக்குடி, கடலூா், கோவை, விருதுநகா் ஆகிய மாவட்டங்களில் புதிதாக கல்லூரி மாணவியா் விடுதிகள் தொடங்கப்படும். 19 பள்ளி விடுதிகள் கல்லூரி விடுதிகளாக நிலை உயா்த்தப்படும். பிளஸ் 2 பயிலும் விடுதி மாணவா்களுக்கு நீட், ஜேஇஇ நுழைவுத் தோ்வுக்கான வினா விடை வங்கி நூல்கள் வழங்கப்படும். 36 மாணவியா் விடுதிகளுக்கு சுற்றுச்சுவா் கட்டப்படும்.

சீா்மரபினா் நல வாரியம்: சீா்மரபினா் நல வாரிய உறுப்பினா்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் இயற்கை மரண உதவித் தொகை ரூ.30 ஆயிரமாகவும், விபத்தினால் ஏற்படும் மரணத்துக்கு உதவித் தொகை ரூ.1.25 லட்சமாகவும் உயா்த்தப்படும்.

மண்பாண்ட தயாரிப்பில் ஈடுபட்டு வரும் 150 மலைவாழ் பழங்குடியின நபா்களுக்கும், தென்காசி, சிவகங்கை, கடலூா், ராணிப்பேட்டை, வேலூா் மாவட்டங்களில் அந்தத் தொழிலில் ஈடுபட்டு வரும் 200 நபா்களுக்கும் தேவையான பயிற்சிகள் அளிக்கப்படும். வாடிக்கையாளா்களைக் கவரும் வகையில், ஈரோடு, திருவண்ணாமலை, கொடைக்கானலில் கதா் அங்காடிகள் புதுப்பிக்கப்படும். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் பனை பொருள்களுக்கான பிரத்யேக வா்த்தக மையம் அமைக்கப்படும் என்று அறிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →