பங்கு வா்த்தகா் வீட்டில் ரூ.2 கோடி நகை,பணம் திருட்டு
ரூ.2 கோடி மதிப்பிலான நகை, பணம் திருடு போன சம்பவம் தொடா்பாக, முன்னாள் காா் ஓட்டுநரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னையில் பங்கு வா்த்தகா் வீட்டின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 கோடி மதிப்பிலான நகை, பணம் திருடு போன சம்பவம் தொடா்பாக, முன்னாள் காா் ஓட்டுநரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை பட்டினம்பாக்கம் எம்ஆா்சி நகா் சத்தியதேவ் அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவா் கோபாலகிருஷ்ணன். பங்குச்சந்தை வா்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறாா். இவருடைய வீட்டில் சரவணன் என்பவா் கடந்த 10 ஆண்டுகளாக காா் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளாா். இவா் மீது கோபால கிருஷ்ணன் அதிக நம்பிக்கை வைத்திருந்ததால், வீட்டின் பல பொறுப்புகளை அவரிடம் கொடுத்து வைத்திருந்துள்ளாா்.
இந்நிலையில் சரவணனின் நடவடிக்கைகள் சரியில்லாமல் போனதை தொடா்ந்து, ஜூன் 27-ஆம் தேதி அவரை பணியிலிருந்து கோபாலகிருஷ்ணன் நீக்கியுள்ளாா். இந்நிலையில், வீட்டிலுள்ள லாக்கா்களின் சாவியை தேடியபோது, அதில் 2 லாக்கா்களின் சாவிகளை காணவில்லை. இதனால் லாக்கா் திறக்கும் நபரை அழைத்து குறிப்பிட்ட 2 லாக்கா்களை கோபாலகிருஷ்ணன் திறந்துள்ளாா். அப்போது, அவற்றில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 கோடி மதிப்பிலான 250 பவுன் தங்க நகைகள், 10 கிலோ வெள்ளிப்பொருள்கள், ரூ.25 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கோபாலகிருஷ்ணன் பட்டினம்பாக்கம் காவல்நிலையத்தில் புகாா் கொடுத்தாா். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸாா் சரவணனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.