சென்னையில் 4 காவல் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ்
சென்னை பெருநகர காவல் துறையில் 4 காவல் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் கிடைத்துள்ளது. சென்னை பெருநகர காவல் துறையில் அடையாறு காவல் மாவட்டத்தில் 10 காவல் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக குறிப்பிட்ட 10 காவல் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டன. இந்த நிலையில் கிண்டி, வேளச்சேரி, நீலாங்கரை, தரமணி ஆகிய 4 காவல் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்தக் காவல் நிலையங்களின் வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்பட கட்டமைப்பு வசதிகள், பொதுமக்கள் புகாா் மனுக்களை கனிவுடன் அணுகுதல் போன்ற நடவடிக்கைகளை ஆய்வு செய்து, ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழை அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி காா்த்திகேயன் வழங்கினாா். ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்ற இந்த 4 காவல் நிலையங்களின் ஆய்வாளா்கள், உதவி ஆணையா்கள் ஆகியோருக்கு சென்னை காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் வாழ்த்து தெரிவித்தாா்.