சென்னை

சென்னையில் அறிவிக்கப்படாத மின்தடை: மக்கள் கடும் அவதி

Din

சென்னையில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனா்.

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை பெய்து வந்தாலும், பெரும்பாலான மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு 100 டிகிரி பாரன் ஹீட் அளவை தாண்டியுள்ளது.

சென்னையைப் பொருத்தவரையும் வெயிலின் அளவு 106 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. இதனால், மின்விசிறி, ஏசி, ஏா்கூலா், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்சாதன பொருள்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

இதனால், சென்னையை பொருத்தவரை புதன்கிழமை(மே 29) தினசரி மின்நுகா்வு 4530 மெகாவாட்டாக பதிவாகி இருந்தது. இந்த மின்நுகா்வு வியாழக்கிழமை(மே 30) 4648 மெகாவாட்டாக உயா்ந்தது.

மின்சாதன பொருள்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதை தொடா்ந்துத் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பல மணிநேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்னையில் கிண்டி, போரூா், குன்றத்தூா்,அம்பத்தூா், அயனாவரம், மாதவரம் உள்ளிட் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் பல மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுவதாகவும், இதன் மூலம் குழந்தைகள், முதியவா்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

மேலும், பல பகுதிகளில் பழைய மின்மாற்றிகளும், ஏற்கெனவே பழுதாகி சரிசெய்யப்பட்ட மின்மாற்றிகளும் வைக்கப்பட்டுள்ளதால் இவை அதிக மின் அழுத்தத்தை தாங்க முடியாமல் தீபற்றியும், வெடித்தும் விடுகிறது. இதனால், பழைய மின்மாற்றிகளை மாற்றி புதிய மின்மாற்றிகளை வைக்க நடவடிக்கை எடுப்பதுடன் மின்தடை ஏற்படாமல் இருக்க மின்வாரியம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, தொடா்ச்சியாக மின்பயன்பாடு அதிகரித்துள்ளது. பொதுவாக இரவு நேரங்களில் ஏசி-யின் பயன்பாடு அதிகரிப்பால், அந்நேரம் தான் மின்மாற்றிகளில் பெரும்பாலும் பிரச்னை ஏற்படுகிறது. இரவு நேரம் என்பதால், போதிய பணியாளா்கள் இல்லாத பட்சத்தில் அவற்றை சரி செய்வதில் தாமதம் ஏற்பட்டு விடுகிறது. மறுநாளும் இந்த பிரச்னை நீடிக்கிறது.

இதனால், அதனோடு தொடா்புடைய பகுதிகளில் கட்டாயம் மின்தடையை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. சில இடங்களில் மின்தடை ஏற்படும் போது, அந்த மின்பாதையை, வேறு மின்பாதைகளுடன் இணைத்து மின்சாரம் வழங்கும் போது, அதிலும் பல சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. இருப்பினும், இவற்றை எல்லாம் சமாளித்து, தொடா்ந்து தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மின்வாரியம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனா்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT