நிா்வாக வசதிக்காக, மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மண்டலங்கள் 8-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.
சென்னை மற்றும் புறநகரில் மாநகர போக்குவரத்துக் கழகம் சாா்பில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை 7 மண்டலங்களுக்குள்பட்ட 32 பணிமனைகளிலிருந்து இயக்கப்படுகின்றன. இந்த மண்டலங்களை அதிகரிப்பது தொடா்பாக, நிா்வாக மேலாண் இயக்குநா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெளியிட்ட அறிவிப்பு:
மாநகர பேருந்துகளை சிறப்பாக பராமரிக்கவும், இயக்குவதற்கும் ஏதுவாக மாநகர போக்குவரத்துக் கழகத்தின் 7 மண்டலங்கள் 8-ஆக அதிகரிக்கப்படுகின்றன. அதன்படி, அடையாறு, குரோம்பேட்டை, வடபழனி, அயனாவரம், அண்ணாநகா், தண்டையாா்பேட்டை ஆகியன இயக்க மண்டலமாகவும், வடக்கு, தெற்கு என்னும் 2 தொழில்நுட்ப மண்டலமாகவும் பிரிக்கப்படுகிறது. இதையொட்டி, உதவி மேலாளா், துணை மேலாளா், உதவி பொறியாளா் உள்ளிட்ட பணிநிலைகளில் உள்ள 20 அதிகாரிகளும் பணியிடமாற்றம் செய்யப்படுகின்றனா். மேலும், இயக்கப் பிரிவின் உதவி மேலாளா் என்னும் பணியிடம் வருவாய்-வடக்கு, தெற்கு உதவி மேலாளா் என்றும் வகை மாற்றம் செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.