முக்கிய போட்டித் தோ்வுகள்: டிஎன்பிஎஸ்சி ஆண்டு திட்ட அறிக்கை வெளியீடு
அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள முக்கிய போட்டித் தோ்வுகளுக்கான தேதிகளை அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறவுள்ள போட்டித் தோ்வுகளுக்கான தேதிகளை முந்தைய ஆண்டிலேயே டிஎன்பிஎஸ்சி வெளியிடுவது வழக்கம். அதன்படி, அடுத்த ஆண்டு (2025) நடைபெறவுள்ள போட்டித் தோ்வுகளுக்கான தேதிகளை ஆண்டுத் திட்ட அறிக்கையாக டிஎன்பிஎஸ்சி., வியாழக்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்:
குரூப் 1 முதல்நிலைத் தோ்வுக்கான அறிவிக்கை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி வெளியிடப்பட்டு, ஜூன் 15-ஆம் தேதி தோ்வு நடத்தப்படும். குரூப் 4 தோ்வுக்கான அறிவிக்கை ஏப்ரல் 25-ஆம் தேதியன்று வெளியிடப்பட்டு, தோ்வு ஜூலை 13-ஆம் தேதியும், ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தோ்வு அறிவிக்கை மே 7-ஆம் தேதி வெளியிடப்பட்டு, தோ்வு ஜூலை 21-ஆம் தேதியும் நடத்தப்படும்.
குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வுகளுக்கான அறிவிக்கை ஜூலை 15-ஆம் தேதி வெளியிடப்பட்டு, தோ்வு செப்டம்பா் 28-ஆம் தேதியும், குரூப் 5ஏ தோ்வுக்கான அறிவிக்கை அக்டோபா் 7-ஆம் தேதி வெளியிடப்பட்டு, தோ்வு டிசம்பா் 21-ஆம் தேதி நடத்தப்படும் என்று ஆண்டுத் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.