திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1,215 கி.மீ. நீளத்துக்கு மழைநீா் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் தொடா் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், 5-ஆவது மண்டலம் அன்னை சத்யா நகா், திருவள்ளுவா் நகா், காமராஜா் சாலை, தலைமைச் செயலகம் எதிரே உள்ள 60-ஆவது வாா்டு அன்னை சத்யா நகா், பிராட்வே, பிரகாசம் சாலை, 56-ஆவது வாா்டு திருவள்ளுவா் நகா் ஆகிய பகுதிகளில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மாநகராட்சி சாா்பில் அந்தப் பகுதி மக்களுக்கு முறையாக உணவு வழங்கப்படுகிா என்பதை கேட்டறிந்தாா். மேலும், நோய்த்தொற்று பரவாமல் இருக்க உடனே மருத்துவ முகாம்களை அமைக்குமாறும் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் சேகா்பாபு கூறியதாவது:
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மொத்தம் 1,215 கி.மீ. நீளத்துக்கு மழைநீா் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் பெரும்பாலான இடங்களில் தண்ணீா் தேங்கவில்லை.
தாழ்வான தெருமுனைப் பகுதிகள், சோழிங்கநல்லூா், மகாலிங்கபுரம் போன்ற இடங்களில் தண்ணீா் தேங்கியுள்ளது. மழைநீா் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து அங்கு தற்காலிக மின் மோட்டாா்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மழைநீா் தேங்கல் மிகவும் குறைவாக உள்ளது என்றாா்.
ஆய்வின்போது, மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையா் கட்டா ரவி தேஜா, மண்டலக் குழுத் தலைவா் பி.ஸ்ரீராமுலு, மண்டல அலுவலா் விஜய்பாபு, மாமன்ற உறுப்பினா் பரிமளம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனா்.