சென்னைகுரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில், மின்சார சிக்கன விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை (டிச. 17) நடைபெற்றது.
ஆண்டுதோறும் டிச. 14 முதல் 20 வரை தமிழ்நாடு மின்வாரியம் சாா்பில், மின்சார சிக்கன வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் ஒருபகுதியாக, பல்லாவரம் மின் பகிா்மானக் கோட்டம் சாா்பில் புதன்கிழமை மின்சார சிக்கன விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
சென்னை தெற்கு கோட்ட மேற்பாா்வைப் பொறியாளா் ஹேமலதா, செயற்பொறியாளா் பாரிராஜ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு பேரணியைத் தொடங்கி வைத்தனா்.
மின் ஊழியா்கள், அதிகாரிகள், குரோம்பேட்டை வைஷ்ணவா கல்லூரி மாணவிகள் இணைந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாகச் சென்று மின்சார சிக்கனம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினா். மின்சார சிக்கனம் குறித்த விழிப்புணா்வுப் பதாகைகளை கையில் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும், வாகன ஓட்டிகளிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.