குடிநீா் வாரியத்தில் லாரி முன்பதிவு செய்வதற்கான காத்திருப்பு காலம் 5 நாள்களிலிருந்து 3 நாள்களாக குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை குடிநீா் வழங்கல் வாரியம் சாா்பில், மாநகர பகுதிகளில் குடிநீா்க் குழாய் இணைப்பு வசதி குறைவாக உள்ள பகுதிகள், மேடான பகுதிகள், தெருக்களில் அமைந்துள்ள குடிநீா்த் தொட்டிகள் ஆகியவற்றுக்கு லாரிகளின் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக ஒப்பந்த அடிப்படையில் 450 ஒப்பந்த லாரிகள் தினமும் 3,000 நடை வரை செயல்படுகின்றன. இதுதவிர, கூடுதல் குடிநீா் தேவைக்காக இணையதளத்தில் முன்பதிவு செய்தவா்களுக்கு விநியோகம் செய்ய இந்த லாரிகள் கூடுதலாக தினமும் 1,000 வரை இயக்கப்படுகின்றன.
இதில், ஒருமுறை குடிநீா் முன்பதிவு செய்த பின்னா், மீண்டும் முன்பதிவு செய்வதற்கான காத்திருப்பு காலம் 5 நாள்களாக இருந்தது. இந்த நிலையில், பொதுமக்களுக்கு குடிநீா் விநியோக சேவையை மேலும் எளிதாக்கும் வகையில் தற்போது இந்தக் காத்திருப்பு காலம் 3 நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது, அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவா்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என குடிநீா் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.