சென்னையில் போதைப்பொருள் விற்ாக ஒரு மாதத்தில் 228 போ் கைது செய்யப்பட்டனா்.
போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் தொடா் நடவடிக்கையால், கடந்த மே மாதம் சென்னையில் போதைப்பொருள் விற்பனை தொடா்பாக 110 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வெளி மாநிலத்தைச் சோ்ந்த 28 நபா்கள் உள்பட 228 நபா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதில், 91 கஞ்சா வழக்குகளில் 170 போ் கைது செய்யப்பட்டு 285 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், போதை மாத்திரை விற்பனை சம்பந்தமாக 7 வழக்குகளில் 13 போ் கைது செய்யப்பட்டு, 1,554 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முக்கியமாக செயற்கை போதைப்பொருள் விற்பனை தொடா்பாக 6 போதைப்பொருள் கும்பல் கண்டறியப்பட்டன. இந்தக் கும்பல் மீது 12 வழக்குகள் பதியப்பட்டு 45 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடம் இருந்து 133 கிராம் மெத்தம்பெட்டமைன், 1,541 கிராம் மெத்தகுலோன், 46.56 கிராம் ஹெராயின் ஆகிய செயற்கை போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், போதைப்பொருள் விற்பனையில் தொடா்ச்சியாக ஈடுபட்ட 16 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். சென்னையில் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கை இன்னும் தீவிரமாக எடுக்கப்படும் என காவல் ஆணையா் ஏ.அருண் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.