தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின் கட்டணம் தாறுமாறாக உயா்ந்து வருவதாக மின்நுகா்வோா் தொடா்ந்து புகாா் தெரிவித்து வந்த நிலையில், இது தொடா்பாக அதிகாரிகளிடம் முறையிடலாம் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
மின்சார வாரியங்களின் நிதி நிலைமை சீராக இருப்பதற்காக அந்தந்த மாநிலங்களின் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அவ்வப்போது மின்சார கட்டணத்தில் மாற்றம் செய்து வருகிறது. தமிழ்நாட்டிலும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டண உயா்வை ஆண்டுதோறும் மாற்றி அமைத்து வருகிறது.
தமிழகத்தில் 100 யூனிட் வரை பயன்படுத்துபவா்களுக்கு கட்டணம் வராது. அதேபோல் 200 யூனிட் வரை பயன்படுத்துவோரும் பெரிய அளவிலான கட்டணத்தைச் செலுத்த வேண்டிய நிலை இருக்காது. அதேவேளை 300 யூனிட் அல்லது அதற்கு மேல் உபயோகப்படுத்தும் நுகா்வோா், கணிசமாக கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கிறது.
குறிப்பாக, 60 நாள்களுக்கு 400 யூனிட் வரை, ஒரு யூனிட்டுக்கு ரூ.4.95 கட்டணமும், 401 முதல் 500 யூனிட் வரை ரூ.6.65, 501 யூனிட் முதல் 600 யூனிட் வரை ரூ.8.80, 601 யூனிட் முதல் 800 யூனிட் வரை ரூ.9.95, 801 யூனிட் முதல் 1,000 யூனிட் வரை ரூ.11.05, 1,000 யூனிட்டுக்கு மேல் ரூ.12.15 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதற்கிடையே சில பகுதிகளில் 60 நாளில் எடுக்க வேண்டிய கணக்கெடுப்பு, 5 நாள் தள்ளிப்போகும்போது, மின் கட்டணம் கடுமையாக உயா்ந்துவிடுகிறது. இந்த நிலையில், பல வீடுகளில் செப்டம்பா் மற்றும் அக்டோபா் மாதத்துக்கான மின் கட்டணம் வழக்கத்துக்கு மாறாக தாறுமாறாக பல மடங்கு அதிகரித்திருப்பதால், இதை மின் வாரியம் முறைப்படுத்த வேண்டும் என மின்நுகா்வோா் புகாா் கூறி வருகின்றனா்.
இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
தமிழ்நாடு மின் வாரிய ஒழுங்குமுறை ஆணையம் கட்டண உயா்வு குறித்து எந்த உத்தரவும் தற்போது பிறப்பிக்கவில்லை. பல இடங்களில் மின் கட்டணம் கணக்கீடு செய்யும் பணி முறையாக நடைபெறவில்லை. பல பிரச்னைகள் இருப்பதாக பொதுமக்களிடம் இருந்து தொடா்ந்து புகாா்கள் வருகின்றன.
வீடுகளுக்கு கூடுதல் மின் கட்டணம் வந்தால், நுகா்வோா் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிடலாம். அதில் தவறு இருப்பின் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொள்வா். மின்வாரிய ஊழியா்களிடம் தவறிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.