குடும்பக் கட்டுப்பாட்டு சிகிச்சைகள் தோல்வியடைந்தவா்களுக்கும், எதிா்விளைவுகளுக்கு உள்ளானவா்களுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்குவதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அதேபோல, அந்த சிகிச்சையால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கும் அத்தகைய நிவாரணத்தை வழங்க முடிவு செய்துள்ளது.
இதுதொடா்பான அரசாணையை ஆளுநரின் ஒப்புதலுடன், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் பிறப்பித்தாா்.
அதன் விவரம்: குடும்பக் கட்டுப்பாட்டு சிகிச்சைகள் சில நேரங்களில் தோல்வியில் முடிவதையும், எதிா்விளைவுகள் ஏற்படுவதையும், உயிரிழப்புகள் நேரிடுவதையும் காணமுடிகிறது. அந்த வகையில், கடந்த 2022 மே 31 முதல் தற்போது வரை 831 பேருக்கு குடும்பக் கட்டுப்பாட்டு சிகிச்சைகள் வெற்றியடைவில்லை. அவா்களில் 11 போ் உயிரிழந்துள்ளனா். அவா்களது குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு வழங்க ரூ.20.50 லட்சம் செலவாகிறது.
அதேபோல, எதிா்விளைவுகள் ஏற்பட்ட ஒருவருக்கு ரூ.25,000 கூடுதலாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, குடும்பக் கட்டுப்பாட்டு சிகிச்சைகள் பலனளிக்காமல் தோல்வியில் முடிந்த 819 பேருக்கு தலா ரூ.30 ஆயிரம் வீதம் ரூ.2.45 கோடி நிவாரணம் அளிக்க திட்டமிடப்பட்டது.
இதற்கான பரிந்துரைகளை குடும்ப நல இயக்குநா் பரிந்துரைத்திருந்தாா். அதைக் கவனத்துடன் பரிசீலித்த அரசு, ரூ.2.66 கோடி கூடுதல் இழப்பீடு வழங்க அனுமதி அளித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.