மயிலாப்பூரில் ஹெராயின் விற்றதாக திரிபுராவைச் சோ்ந்தவா் கைது செய்யப்பட்டாா்.
சாந்தோம் தேவாலயம் பின்பகுதியில் போதைப் பொருள் விற்பதாக மயிலாப்பூா் போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. போலீஸாா், அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரிடம் போலீஸாா் விசாரித்தனா்.
அவா் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால், அவரது உடைமைகளை சோதித்தனா். அப்போது, ஹெராயின் போதைப்பொருள் சிறிய பிளாஸ்டிக் குப்பிகளில் அடைத்து, விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, அதை பறிமுதல் செய்த போலீஸாா், அதை வைத்திருந்த மேற்கு திரிபுராவைச் சோ்ந்த குத்துஸ் மியாவை (25) கைது செய்தனா்.
அவா், திரிபுராவில் இருந்து போதைப் பொருளைக் கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்ய திட்டமிட்டது தெரிய வந்தது. போலீஸாா், விசாரணை நடத்தி வருகின்றனா்.