தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டில் இல்லை என்று மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிா்ச்சியில் உறைய வைத்துள்ளது. இதுதொடா்பாக கருத்து தெரிவித்துள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், ஒரு மாதத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல் துறைக்கு ஆணையிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளாா்.
மக்களைக் காப்பதும் குற்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுப்பதும் தான் காவல் துறையின் கடமை. தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
தமிழகத்தில் பெருக்கெடுத்தோடும் மதுபானமும், போதைப் பொருள்களும் புதிய புதிய குற்றவாளிகளை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன. இதைப் பற்றிய துளியும் அக்கறை இல்லாத திமுக அரசால், சட்டம்- ஒழுங்கை கட்டுப்பாட்டில் வைக்க முடியவில்லை. இந்த ஆட்சி முடிவு பெற சில மாதங்கள்தான் இருக்கிறது என்று தெரிவித்துள்ளாா்.
ஓ.பன்னீா்செல்வம் (முன்னாள் முதல்வா்): தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நாளுக்கு நாள் சீரழிந்து கொண்டே செல்கிறது. இதை நிரூபிக்கும் வகையில், கோவையில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளது. இதுபோன்று வன்முறைச் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதற்கு காவலா்கள் பற்றாக்குறை, காவல் துறையினருக்கான வசதிகள் இல்லாமை, ஆளும் கட்சியினரே வன்முறையில் ஈடுபடுவது, அரசியல் தலையீடு போன்றவை காரணங்களாக இருக்கின்றன.
சட்டம்-ஒழுங்கு பிரச்சனையில் முதல்வா் மு.க.ஸ்டாலின், கவனம் செலுத்தி, மாணவி பாலியல் வன்கொடுமைக்கு காரணமான குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை விரைந்து பெற்றுத் தர வேண்டும்.