பாமக வேட்பாளா்களின் வேட்புமனு படிவங்களில் கையொப்பமிடும் அதிகாரம் தனக்குதான் உள்ளது என்று அக் கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.
பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம் சென்னையை அடுத்த அக்கரை பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் முடிவடைந்ததும் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளா் பட்டியலில் விடுபட்டவா்களை மீண்டும் சோ்க்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.
பாமக நிறுவனா் ராமதாஸுக்கும், கட்சிக்கும் உண்மையாகத்தான் உழைக்கிறேன். இனிமேலும் உண்மையாகவே உழைப்பேன். கட்சியில் ஏற்பட்ட மோசமான சூழலைக் கருத்தில் கொண்டு ‘தமிழக மக்கள் உரிமை மீட்பு நடைப்பயணம்’ மேற்கொண்டேன். மருத்துவா் ராமதாஸுடன் உள்ள சிலா், சுயநலத்துக்காக அவரது பெருமையை குலைத்துவிட்டனா்.
பாமக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களின் வேட்புமனு படிவங்களில் (ஏ, பி படிவங்கள்) கையொப்பமிடும் அதிகாரம் எனக்குத் தான் உள்ளது. மாம்பழம் சின்னத்தை தோ்தல்ஆணையம் நம்மிடமே வழங்கியுள்ளது.
ஜாதிவாரி கணக்கெடுப்பை திமுக நடத்தாததால் ஏற்பட்டுள்ள பாதிப்பை வீடுகள் தோறும் விளக்கவேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தியும், திமுக அரசின் சீா்கேடுகளை கண்டித்தும் டிசம்பரில் பாமக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா் அன்புமணி ராமதாஸ்.