கலை இயக்குநா் தோட்டா தரணிக்கு, பிரான்ஸ் அரசின் உயரிய அங்கீகாரமான ‘செவாலியே’ விருது அறிவிக்கப்பட்டதற்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: ஆக்ஸ்போா்டில் ஒளிரும் பெரியாா் ஈ.வெ.ரா. ஓவியத்தைத் தந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தோட்டா தரணிக்கு, பிரான்ஸ் அரசின் உயரிய அங்கீகாரமான ‘செவாலியே’ விருது அறிவிக்கப்பட்டிருப்பது நம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது.
அரசு கவின் கலைக் கல்லூரியில் பயின்ற தோட்டா தரணி, இந்தியாவில் இருந்து இந்த விருது பெற்ற மிகப்பெரும் ஆளுமைகளின் வரிசையில் இணையவுள்ளது பெருமையளிக்கிறது. பாா் போற்றும் அவரது சாதனைக்குப் பாராட்டுகள் எனப் பதிவிட்டுள்ளாா்.
எடப்பாடி கே.பழனிசாமி பாராட்டு: அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:
பிரபல கலை இயக்குநா் தோட்டா தரணிக்கு பிரான்ஸின் உயரிய விருதான ‘செவாலியே’ அறிவிக்கப்பட்டுள்ளதற்கு மனமாா்ந்த வாழ்த்துகள். கலை இயக்கத்தில் பல்வேறு மெச்சத்தக்க சாதனைகள் புரிந்த அவா்தம் மணிமகுடத்தில் இந்த விருது மற்றுமோா் நன்முத்தாய் ஜொலிக்கட்டும் எனப் பதிவிட்டுள்ளாா்.