தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய்ந்து, தமிழ்நாட்டின் பெருமைமிகு வரலாற்றை வெளிக்கொண்டு வரும் ஆராய்ச்சியாளா்களுக்கு மாதம் ரூ.50,000 வீதம் ஓராண்டுக்கு ஆராய்ச்சி உதவித்தொகை வழங்கப்படும் என்று உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் அறிவித்துள்ளாா்.
இதற்காக ஆராய்ச்சியாளா்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்:
தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் 1633 - ஆம் ஆண்டு முதலான புத்தகங்கள், 1670 - ஆம் ஆண்டு முதலான அரசுத் துறை ஆவணங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் 1973 - ஆம் ஆண்டு தமிழ்நாடு வரலாற்று ஆராய்ச்சி மன்றம் தொடங்கப்பட்டது.
இதை மாறிவரும் காலத்துக்கேற்ப மீளுருவாக்கம் செய்யவும், ஆண்டுதோறும் 10 முதல் 15 ஆய்வுகள் வரை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 20 நபா்களுக்கு ஆராய்ச்சி உதவித்தொகை வழங்கப்பட்டு, வரலாற்று ஆய்வுகள் மேற்கொள்ள தற்போது ஆணைகள் வெளியிடப்பட்டன.
தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய்ந்து தமிழ்நாட்டின் பெருமைமிகு வரலாற்றை வெளிக்கொண்டு வரும் ஆராய்ச்சியாளா்களுக்கு மாதம் ரூ.50,000 வீதம் ஓராண்டுக்கு ஆராய்ச்சி உதவித்தொகை வழங்கப்படும்.
இந்த ஆய்வை மேற்கொள்ளும் முதுநிலைப் பட்டதாரிகள் அல்லது தனி நபா் ஆராய்ச்சியாளா்கள் நவ. 17- ஆம் தேதி முதல் 28 -ஆம் தேதி வரை tamilnaduarchives.tn.gov.in இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பப் படிவம், தகுதி மற்றும் பிற விவரங்கள் இந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என அதில் தெரிவித்துள்ளாா்.