வாக்காளர் பட்டி யல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் சென்னை மாநகராட்சியில் தொகுதி மாறியவர்கள் படிவம் பெறுவதில் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் 16 சட்டப்போவைத் தொகுதிகளில் 40.15 லட்சம் வாக்காளர்களுக்கு தலா 2 விண்ணப்பங்கள் கடந்த 4-ஆம் தேதி முதல் 3,178 பணியாளர்களால் விநியோகிக்கப்பட்டன. இரு வாரங்கள் வாக்காளர் வீடுகளைத் தேடி சென்று 75 சதவீத படிவங்கள் விநியோகிக்கப்பட்டன. தெருக்கள், வார்டுகள், தொகுதிகள் மாறிச் சென்றவர்களைக் கைப்பேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இருப்பினும் தொகுதி மாறியவர்களில் பெரும்பாலானோருக்கு கணக்கீட்டுப் படிவம் வழங்கப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. அவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களைத் தேடி கண்டுபிடித்து படிவங்களைப் பெற்றாலும், பூர்த்தி செய்து மீண்டும் வழங்குவதில் சிரமத்தைச் சந்திக்கின்றனர். இதுபோன்ற பிரச்னையால் வார்டுக்கு சுமார் 300 பேர் வரைவு பட்டியலில் இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
இவ்வாறு தொகுதி மாறியவர்கள் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு புதிய முகவரி தொடர்பான ஆவணங்களுடன் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவம் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தப் பிரச்னை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கே.கே.நகர் 42-ஆவது வார்டு உறுப்பினர் எம்.ரேணுகா கூறுகையில், தொகுதி மாறிச் சென்றவர்கள், கணக்கீட்டுப் படிவம் அளிப்பதற்காக அலையவேண்டிய நிலை உள்ளது. இணையதளச் செயல்பாடும் விரைவாக இல்லை என்றார்.
வடசென்னை தெற்கு வடக்கு அதிமுக மாவட்டச் செயலர் ஆர்.எஸ்.ராஜேஷ் கூறுகையில், தொகுதி மாறியவர்கள் அந்தத் தொகுதியின் புதிய வாக்காளர்களாகப் பதிவு செய்ய வேண்டும். அதுதான் நடைமுறை என்றார்.
திமுகவினர் மீது புகார்: தொகுதி மாறிச்சென்ற திமுகவினரை மட்டும் பழைய தொகுதி வாக்காளர் பட்டியலில் வலுக்கட்டாயமாக அதிகாரிகள் துணையுடன் சேர்க்கும் வகையில் திமுகவினர் செயல்படுவதாக அதிமுக தரப்பில் கூறப்படுகிறது. இந்தப் பிரச்னையால் படிவம் கணினியில் பதிவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால், 20 சதவீத படிவங்களே பதிவேற்றப்பட்டுள்ளன என்றும் புகார் தெரிவிக்கப்படுகிறது.
மீண்டும் சிறப்பு முகாம்: இந்தப் பிரச்னை குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டபோது, வாக்காளர் சிறப்பு திருத்தப் பணியில் தற்போது உரிய ஆவணங்களுடன் படிவம் நிரப்பியவர்களைக் கணினியில் பதிவேற்றம் செய்து வருகிறோம். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடத்தப்படும். அப்போது, இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்படும் என்றனர்.
இதனிடையே சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் திங்கள்கிழமை (நவ.24) நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.