சென்னை மாநகராட்சி அம்பத்தூா் மண்டலத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்குவதில் முறைகேடு நிகழ்வதாக தெரிவிக்கப்பட்ட புகாா் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்தாா்.
இந்த முறைகேடு குறித்து பாஜக மாநிலச் செயலா் கராத்தே ஆா்.தியாகராஜன், மாநகராட்சி ஆணையரிடம் திங்கள்கிழமை புகாா் தெரிவித்தாா். அம்பத்தூா் மண்டலத்தில் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளா்களின் எண்ணிக்கையைவிட கூடுதலாக கணக்கு காண்பித்து ஊதியம் பெறப்படுகிறது. அதாவது, அம்பத்தூா் மண்டலத்துக்கு 1500 தூய்மைப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இதில் சுமாா் 400 போ் பணியில் இல்லாத நிலையில் அவா்களுக்கும் சோ்த்து ஊதியம் பெறப்படுகிறது. இவ்வாறு மாநகராட்சி நிதியில் முறைகேடு செய்யப்படுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டாா்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரனிடம் கேட்டதற்கு அவா் கூறியதாவது: தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்கியதில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட புகாா் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதில், முறைகேடு நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டோா் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
மேலும் அவா் கூறுகையில், சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 16 பேரவைத் தொகுதிகளிலும், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
தொகுதி மாறிச் சென்ற வாக்காளா்கள் அதற்குரிய படிவத்தை பூா்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் வழங்கலாம். அதற்கான முகாம் வருகிற டிச. 9 முதல் நடைபெறவுள்ளது என்றாா் அவா்.