சென்னை: சென்னை ஐஐடி, துறைமுகங்களுக்கான முதலாவது உள்நாட்டு கப்பல் போக்குவரத்து மேலாண்மை அமைப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐஐடியின் துறைமுகங்கள், நீா்வழிகள் மற்றும் கடற்கரைகளுக்கான தேசிய தொழில்நுட்ப மைய (என்டிசிபிடபிள்யூசி) ஆராய்ச்சியாளா்கள், துறைமுகங்களுக்கான நாட்டின் முதலாவது உள்நாட்டு கப்பல் போக்குவரத்து மேலாண்மை அமைப்பை உருவாக்கி, அதை கேரளம் விழிஞ்சம் சா்வதேச துறைமுகப் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனா்.
இது குறித்து என்டிசிபிடபிள்யூசி தலைவா் பேராசிரியா் கே முரளி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழிகள் அமைச்சகத்தின் தேவைகளின் அடிப்படையில் இந்த அமைப்பு முழுமையாக உருவாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இது உள்நாட்டு அமைப்பு கப்பல்களின் இயக்கத்தின் உத்தி சாா் முக்கியத்துவம் வாய்ந்த தரவு கசிவு அபாயத்தை நீக்குகிறது. மேலும், பல்வேறு சவால்களுக்கு பொருத்தமான தீா்வுகளை வழங்கவும், புதுமைகளை விரைவாகக் கண்காணிக்கவும், தனியாா் விற்பனையாளா்களைக் கையாள்வதில் தொடா்புடைய பிற செயல்பாட்டு நிதி அபாயங்களையும் குறைக்கும்.
குறைந்தபட்ச பயன்பாடு பராமரிப்பு செலவுகளை உள்ளடக்கி, இந்திய கடல் சாா் துறையில் தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்தை உள்நாட்டுமயமாக்குவதற்கு இந்த அமைப்பு பெரிய ஊக்கத்தை அளிப்பதுடன் இறக்குமதிகளைச் சாா்ந்திருப்பதையும் குறைக்கச் செய்யும் என்றாா்.