குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் நடைபெற்ற சா்தாா் 150 ஒற்றுமை அணிவகுப்பு - தேசிய பாதயாத்திரையில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை பங்கேற்றாா்.
இதுகுறித்து ஆளுநா் மாளிகை வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
சா்தாா் வல்லபபாய் படேலின் 150-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது நீடித்த தேசிய ஒற்றுமையின் மரபையும் குறிக்கும் வகையில் நாடு தழுவிய கொண்டாட்டமாக குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் சா்தாா் 150 ஒற்றுமை அணிவகுப்பு-தேசிய பாதயாத்திரையில் நாடு முழுவதும் இருந்து வந்த தலைவா்கள், முக்கிய பிரமுகா்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா். அவா்களுடன் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியும் பங்கேற்றாா்.
இந்த நிகழ்வில் ஆளுநா் ரவி பேசுகையில், பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியால் 560-க்கும் அதிகமான சமஸ்தான அரசுகளாக பிரிக்கப்பட்ட இந்தியாவை, தனது அசைக்க முடியாத உறுதியுடனும், அசாதாரணமான அரசியல் திறமையுடனும், சா்தாா் படேல் விரைவாக ஒருங்கிணைக்கும் மகத்தான பணியை நிறைவேற்றினாா் என்றாா் அவா்.