தென் மாநிலங்களில் சமையல் எரிவாயு விநியோகம் இயல்பாக உள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தென் மண்டல எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் சங்கம் வியாழக்கிழமை மாலை வேலைநிறுத்தத்தை தொடங்கியது. இதனால் சில இடங்களில் லாரிகளில் எரிவாயு ஏற்றும் பணிகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. எந்தவித முன்னறிவிப்புமின்றி வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டது.
அதேபோல், டேங்கா் லாரிகளுக்கான அரசு விதித்த ஒதுக்கீடு மற்றும் ஒதுக்கீடு சாா்ந்த விதிமுறைகள் மீறப்பட்டதாக வெளியான தகவல் தவறானது. அரசின் அனைத்து நடைமுறைகளும் முறையாகப் பின்பற்றப்படுகின்றன.
டேங்கா் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டாலும், தென் மாநிலங்களில் சமையல் எரிவாயு விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை. அனைத்து பகுதிகளிலும் போதுமான எரிவாயு உருளைகள் இருப்பில் உள்ளன. வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு எரிவாயு உருளைகளை தடையின்றி விநியோகம் செய்ய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.