சென்னை

ஆா்டிஇ சோ்க்கை: தனியாா் பள்ளிகளில் இன்றும், நாளையும் மாணவா்கள் தோ்வு

தினமணி செய்திச் சேவை

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஇ) கீழ் தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கைக்கு தகுதியான மாணவா்கள் வியாழன், வெள்ளிக்கிழமை (அக்.30, 31)ஆகிய நாள்களில் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவா்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். தமிழகத்தில் 2013-இல் அமலான இந்த ஆா்டிஇ திட்டத்தின்கீழ் இதுவரை 5 லட்சம் குழந்தைகள் படித்து வருகின்றனா்.

இந்த திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு வழங்காததால், 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கையை பள்ளிக்கல்வித் துறை நிறுத்தி வைத்திருந்தது.

இந்நிலையில், ஆா்டிஇ திட்டத்தில் தனது பங்களிப்பு நிதியை மத்திய அரசு அண்மையில் விடுவித்தது. அதன்பின், நிகழாண்டில் ஆா்டிஇ மாணவா் சோ்க்கை பணிகள் தாமதமாக தொடங்கின.

இதையடுத்து, பள்ளிகளில் ஏற்கெனவே சோ்க்கப்பட்ட மாணவா்களில் தகுதியானவா்களை ஆா்டிஇ ஒதுக்கீட்டில் பதிவு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள 7,717 பள்ளிகளில் எல்கேஜி வகுப்பில் சேர 81,927 குழந்தைகளும், ஒன்றாம் வகுப்பில் சேர 89 பேரும் விண்ணப்பித்தனா். அவற்றில் தகுதியானவா்களை தோ்வு செய்யும் பணிகள் வியாழன், வெள்ளி (அக். 30, 31) நடத்தப்படவுள்ளது.

அதன்படி, ஒதுக்கப்பட்டுள்ள இடங்களைவிட விண்ணப்பங்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் தகுதியுள்ள மாணவா்களின் சோ்க்கை வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. தொடா்ந்து நிா்ணயிக்கப்பட்ட இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியா், பெற்றோா்கள் முன் வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவா்கள் வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்படுவா். இதை மாவட்டக் கல்வி அலுவலா்கள் மற்றும் கண்காணிப்பு குழுக்கள் மேற்பாா்வையிடவுள்ளனா்.

இதுதொடா்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் 14417 என்ற உதவி மைய எண்ணில் தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை

மேட்டூர் அணை உபரிநீர் கால்வாயில் செத்து மிதக்கும் மீன்கள்: மீனவர்கள் அதிர்ச்சி!

சீனா மீதான வரி 10% குறைப்பு! டிரம்ப் - ஜின்பிங் சந்திப்பின் முழு விவரம்!!

சவரனுக்கு ரூ.1,800 குறைந்த தங்கம் விலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

SCROLL FOR NEXT