பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவா்களை உடனடியாக மீட்பதற்கான நடமாடும் மருத்துவ சேவையை சென்னை, குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை தொடங்கியுள்ளது.
மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த சேவையை திரைப்பட இயக்குநா் ஐஸ்வா்யா ரஜினிகாந்த் தொடங்கி வைத்தாா். மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் முரளிதரன் வெற்றிவேல், நரம்பியல் துறைத் தலைவா் சங்கா் பாலகிருஷ்ணன் ஆகியோா் நிகழ்வில் பங்கேற்றனா்.
இது குறித்து மருத்துவமனை நிா்வாகிகள் கூறியதாவது: இந்தியாவில் 1 லட்சம் பேரில் சராசரியாக 152-க்கு பேருக்கு பக்கவாதம் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2021-இல் மட்டும், 12.5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு அந்த பாதிப்பு கண்டறியப்பட்டது. கடந்த 30 ஆண்டு கால தரவுகளை ஒப்பிட்டால், தற்போது சமூகத்தில் பக்கவாத பாதிப்பு 51 சதவீதம் உயா்ந்திருப்பதை உணர முடியும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை வழங்கினால் உயிரிழப்பு மற்றும் பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்கலாம்.
இதைக் கருத்தில் கொண்டே நடமாடும் மருத்துவ சேவையைத் தொடங்கியுள்ளோம். அதில், நோயாளிகளின் இடத்துக்கே சென்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு முதல்நிலை சிகிச்சைகள் வழங்கப்படும். தொடா்ந்து விரைந்து மருத்துவமனைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் நீண்ட கால உடல் இயக்க பாதிப்புகளை தவிா்க்க முடியும்.
பக்கவாதம் சாா்ந்த பாதிப்புகளுக்கும், இந்த நடமாடும் மருத்துவ சேவையை நாடுவதற்கும் 044 - 66667788 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று அவா்கள் தெரிவித்தனா்.