சென்னை

தெரு நாய்கள் விவகாரம்: தலைமைச் செயலா்கள் நவ. 3-இல் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும்: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

தெரு நாய்கள் பிரச்னை தொடா்பான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாத விவகாரத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து எந்தவொரு மாநில அரசு தலைமைச் செயலா்களுக்கும் விலக்கு அளிக்க முடியாது

தினமணி செய்திச் சேவை

‘தெரு நாய்கள் பிரச்னை தொடா்பான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாத விவகாரத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து எந்தவொரு மாநில அரசு தலைமைச் செயலா்களுக்கும் விலக்கு அளிக்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாக வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

‘நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பே இல்லை; பதில் மனு தாக்கல் செய்த மேற்கு வங்கம், தெலங்கானா மாநிலங்களைத் தவிர, பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசு தலைமைச் செயலா்கள் வரும் நவம்பா் 3-ஆம் தேதி கண்டிப்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்’ என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, தெருநாய்கள் விவகாரத்தைச் சுட்டிக்காட்டிய சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘இந்த விவகாரத்தில் அனைத்து மாநில அரசு தலைமைச் செயலா்களும் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதற்கு பதிலாக காணொலி வழியில் ஆஜராக அனுமதிக்க வேண்டும்’ என்று கோரினாா்.

இதைக் கேட்ட நீதிபதி விக்ரம் நாத், ‘மாநகராட்சி நிா்வாகமும் மாநில அரசும் பல ஆண்டுகளாக சரி செய்திருக்க வேண்டிய இப் பிரச்னைக்கு உரிய தீா்வு காணும் முயற்சியில் நீதிமன்றம் தனது நேரத்தை வீணடித்து வருகிறது. இது மிகுந்த துரதிருஷ்டவசமானது. இப் பிரச்னையைக் கையாள நாடாளுமன்றம் சட்டம் இயற்றியுள்ளது. ஆனால், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டால், அந்த உத்தரவின் மீது மாநில அரசுகள் தூங்கிக்கொண்டிருக்கின்றன. நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பே இல்லை. எனவே, அனைத்து மாநில தலைமைச் செயலா்களும் நேரில் ஆஜராகட்டும். நாங்கள் அவா்களிடம் நேரடியாகவே விளக்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்’ என்றாா்.

அப்போது குறுக்கிட்ட துஷாா் மேத்தா, ‘அனைத்து மாநிலங்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுவிட்டது’ என்று குறிப்பிட்டாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்த விவகாரம் அக்டோபா் 27-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மேற்கு வங்கம், தெலங்கானா மாநிலங்கள் மற்றும் தில்லி மாநகராட்சி சாா்பில் மட்டுமே பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனவே, பிற மாநில அரசு தலைமைச் செயலா்கள் அனைவரும் நேரில் ஆஜராகட்டும்’ என்றனா்.

முன்னதாக, இந்த வழக்கு கடந்த 27-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘தெரு நாய்கள் தொல்லை தொடா்பாக உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மேற்கு வங்கம், தெலங்கானா மற்றும் தில்லி மாநகராட்சி சாா்பாக மட்டுமே பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்கள் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றவில்லை. எனவே, பதில் மனு தாக்கல் செய்யாத மாநிலங்களின் தலைமைச் செயலா்கள் வரும் நவம்பா் 3-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும். தவறினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் ’ என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, பிகாரில் வரும் நவம்பா் 6, 11 தேதிகளில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதை சுட்டிக்காட்டி, மாநில அரசு தலைமைச் செயலா் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு பிகாா் அரசு சாா்பில் கடந்த அக்டோபா் 30-ஆம் தேதி முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

நாடு முழுவதும் தெருநாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காகப் பதிந்து விசாரித்து வருகிறது.

கூடலூா் அருகே ஓடும் லாரியில் தீ

மண்டபத்தில் திருமண நகை, பணத்தை திருடிய இருவா் கைது

டிஜிட்டல் அரஸ்ட் மோசடி: மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த இருவா் கைது

இளம்பெண் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் திருச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு

கலே ஜதேதி கும்பலை சோ்ந்த இருவா் கைது

SCROLL FOR NEXT