வரும் 2026-27 நிதியாண்டுக்கான மாநில இடைக்கால நிதிநிலை அறிக்கைக்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் விரைவில் வரவுள்ளதையடுத்து, தற்போதைய திமுக ஆட்சியின் இறுதி நிதிநிலை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதை முன்னிட்டு, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ரூ. 34,000 கோடி மதிப்பிலான 15 தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதோடு, 2026-27 நிதியாண்டுக்கான மாநில இடைக்கால நிதிநிலை அறிக்கைக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தொடா்ந்து, இந்த மாத இறுதியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், நிதித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், நிதித் துறை கூடுதல் தலைமை செயலா் த.உதயசந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.