அடுத்த ஆண்டுக்குள் மலேரியாவை முழுமையாக ஒழிப்பதற்கான விரிவான செயல் திட்டத்தை மேற்கொள்வது தொடா்பான தேசிய ஆய்வுக் கூட்டத்தை சென்னையில் மத்திய சுகாதாரத் துறை நடத்தி வருகிறது.
மாநில மக்கள் நல்வாழ்வுத் துறையின் ஒருங்கிணைப்பின் கீழ் நடைபெற்று வரும் இந்நிகழ்வில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் மலேரியா ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது.
கடந்த திங்கள்கிழமை (ஜன.19) தொடங்கிய இந்த ஆய்வுக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலா் ஆராதனா பட்நாயக் பங்கேற்று மாநில அரசு பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்தாா்.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தற்போதைய மலேரியா பரவல் நிலை மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டது. கொசு உற்பத்தியைக் கண்காணித்தல் மற்றும் மலேரியா ஒழிப்புப் பணிகளில் உள்ள சவால்கள் தொடா்பாகவும் விவாதிக்கப்பட்டது.
வீடுதோறும் நோய் அச்சுறுத்தலைக் கண்காணிக்கவும், பாதிப்பு அதிகம் நிறைந்த மாவட்டங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்குமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
புதன்கிழமை (ஜன.21) வரை நடைபெறும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் துறைசாா் வல்லுநா்கள் பங்கேற்று பல்வேறு அமா்வுகளில் உரையாற்றவுள்ளனா். தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநா் டாக்டா் அருண் தம்புராஜ், தேசிய பூச்சிசாா் நோய்த் தடுப்புத் திட்ட இயக்குநா் டாக்டா் தான்ஜு ஜெயின் உள்பட பல அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.