சுடுகாடு செல்லும் பாதையில் பள்ளம்: பொதுமக்கள் அவதி
மதுராந்தகத்தை அடுத்த கீழக்காண்டை ஊராட்சியில் ஏரி நீர் செல்லும் கால்வாய் பாலத்தில் உள்ள பெரிய பள்ளத்தை சீர் செய்ய அப்பகுதி மக்கள்
மதுராந்தகத்தை அடுத்த கீழக்காண்டை ஊராட்சியில் ஏரி நீர் செல்லும் கால்வாய் பாலத்தில் உள்ள பெரிய பள்ளத்தை சீர் செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் கீழக்காண்டை ஊராட்சி மன்றம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக இ.சண்முகம் செயல்பட்டு வருகிறார்.
இந்த ஊராட்சியில் அத்திவாக்கம், மேலக்காண்டை, கீழக்காண்டை போன்ற பகுதிகள் அடங்கியுள்ளன.
Advertisement
மதுராந்தகம் - கடலூர் கிராம நெடுஞ்சாலையை ஒட்டி இந்த ஊராட்சி மன்றம் இயங்கி வருகிறது.
இந்த ஊராட்சியின் ஒரு பகுதியான மேலக்காண்டை காலனியில், இறந்தவர்களை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் பாதையில், ஏரி நீர் செல்லும் கால்வாய் பாலம் உள்ளது. ÷மேலக்காண்டை காலனிக்கு அருகே தனியார் கிடங்கு அமைப்பதற்காக, லாரி மூலம் மணல், செங்கல், சிமென்ட் போன்றவை எடுத்துச் செல்லப்பட்டன.
அதிக பாரம் கொண்ட லாரிகள் அந்த வழியாக பலமுறை சென்று வந்ததால், ஏரிநீர் செல்லும் கால்வாய் மேல்பகுதியில் அமைக்கப்பட்ட பாலத்தின் நடுவில் பள்ளம் விழுந்துள்ளது.
அதனால் அந்தப் பகுதி வழியாக லாரிகளோ, மாட்டு வண்டிகளோ செல்ல முடியாத நிலை.
அதுமட்டுமல்ல, மேலக்காண்டை காலனி பகுதியில் இறந்தவர்களின் சடலத்தை அந்த வழியாக எடுத்துச் செல்ல முடியாது.
இவ்வழியாக பகல் நேரத்தில் ஓரளவுக்கு சென்றால் கூட, இரவு நேரத்தில் கொஞ்சம் கடினம்தான். வயதானவர்கள் ஆடு, மாடுகளை வயல்வெளியில் மேய்க்க அந்த வழியாக செல்ல முடியாது.
இதுகுறித்து மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் அந்த இடத்தை நேரில் வந்து பார்வையிட்டார். இது நடந்து 6 மாதங்களாகியும், இதுவரை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் எத்தகைய நிதியையும் ஊராட்சி மன்றத்துக்கு வழங்கவில்லை.
அவ்வாறு நிதி வழங்கி இருந்தால் இந்த பள்ளத்தை சரி செய்து இருக்க முடியும். இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் இ.சண்முகத்திடம் கேட்டபோது, "ஊராட்சி மன்ற நிதி அப்பகுதி பணிகளை செய்யவே பற்றாத நிலை உள்ளது.
மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஏற்கெனவே இதை சரி செய்ய போதிய நிதியை ஒதுக்கித் தருமாறு கேட்டுள்ளேன்.
ஊராட்சிக்கான திட்ட நிதி வந்தவுடன் உடனடி வேலையாக இந்த பள்ளம் சரி செய்யப்படும்' என்றார்.